/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஆக 16, 2025 01:35 AM
தர்மபுரி, ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அம்மன் கோவில்களில் நடந்த வழிபாட்டில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி டவுன் வெளிப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் நேற்று, ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம் உட்பட வாசனை திரவியங்களால், அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, அங்காளம்மன் ராஜமாதங்கி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
அதேபோல், டவுன் கடைவீதியில் உள்ள, அம்பிகா பரமேஸ்வரியம்மன் வித்யா சரஸ்வதி அலங்காரத்தில் அருள் பாலித்தார். நெசவாளர் காலனி சவுடேஸ்வரியம்மன் பச்சையம்மன் அலங்காரத்திலும், ஓம்சக்தி மாரியம்மன் மற்றும் உழவர் சந்தை எதிரில் உள்ள முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும் என, மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில், அம்மனுக்கு கூழ், வேப்பிலை, பொங்கலை வைத்து வழிபாடு செய்தனர். மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கினர்.
இதே போல் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது. ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பழையபேட்டை நேதாஜி சாலை சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் இளநீர் அலங்காரத்திலும், பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் தேசிய கொடி அலங்காரத்திலும், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியமம்மன் கோவிலில் அம்மன் குளிர்பானங்கள் அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோயில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் அம்மன் வளையல் அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
அதேபோல, ஜக்கப்பன் நகர் ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரம் அம்பாபவானி கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், காட்டிநாயனப்பள்ளி சிவாஜி நகர் சுயம்பு மங்கள கோட்டை மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.