ADDED : மே 02, 2025 02:16 AM
தர்மபுரி:
கோடை காலம் தொடங்கிய நிலையில், கடந்த பிப்., மார்ச், ஏப்., மாதங்களில், தர்மபுரி மாவட்டத்தில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதில், நேற்று காலை முதல் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் மேகமூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து மாலை, 5:15 மணி முதல், அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால், தர்மபுரி நகர பகுதியிலுள்ள சாலைகளில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. அதிகப்படியான வெப்பத்தினால், பொதுமக்கள் தவித்து வந்த நிலையில், நேற்று பெய்த திடீர் கோடை மழையால், ஓரளவிற்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
* அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று மதியம், 3:00 மணி முதல், வானம் மேகமூட்டத்துடன் கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவது போல் இருந்தது. ஆனால், மழை பெய்யவில்லை. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் ஏமாற்றமடைந்தனர்.
நேற்று பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி நகர் முழுவதும் ஆலங்கட்டியுடன் நல்ல மழை பெய்தது. பல ஆண்டுகளுக்கு பின், ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் வெப்பம் தணிந்து, அப்பகுதியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.