/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரிமங்கலம் அருகே நிறைவேற்றப்பட்டுள்ள உபரிநீர் நீரேற்று திட்டம்
/
காரிமங்கலம் அருகே நிறைவேற்றப்பட்டுள்ள உபரிநீர் நீரேற்று திட்டம்
காரிமங்கலம் அருகே நிறைவேற்றப்பட்டுள்ள உபரிநீர் நீரேற்று திட்டம்
காரிமங்கலம் அருகே நிறைவேற்றப்பட்டுள்ள உபரிநீர் நீரேற்று திட்டம்
ADDED : செப் 09, 2024 07:06 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நீரேற்றும் திட்டத்தின் மூலம், பஞ்.,ல் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்டவற்றில் உபரி நீரை நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, கோவிலுார் பஞ்., தலைவி தீவிர முயற்சி எடுத்து, வெற்றி பெற்றுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்தில், கோவிலுார் பஞ்., உள்ளது. இங்கு, மோட்டூர், கோவிலுார், தொன்னையனஹள்ளி, சாமியார்கொட்டாய், ஆண்டிகொட்டாய், சென்றாயனஹள்ளி உட்பட, 14 கிராமங்களில், 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, 1,000 குடும்பங்களுக்கு மேல், விவசாயத்தை பிரதான தொழிலாக நம்பியுள்ளனர். கடந்த, 2021 - 2022 ஆண்டில், தொடர் மழையால், மாவட்டத்திலுள்ள ஏரி, அணைகள் நிரம்பிய நிலையில், கோவிலுாரிலுள்ள ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று பாசனத்தை நம்பிய விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். கடந்த, 10 ஆண்டுகளில், நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
கடந்த, 2023ல் தும்பலஹள்ளி அணை முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வீணாக, பூலாம்பட்டி ஆற்றில் சென்றது. இந்த உபரி நீரை, நீரேற்று திட்டத்தின் மூலம், கோவிலுாரிலுள்ள ஏரிகளுக்கு நிரப்ப, கோவிலுார் பஞ்., தலைவி தமிழ்செல்வி மற்றும் கிராம வளர்ச்சி குழு உறுப்பினர் நந்திசிவன் முடிவு செய்தனர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். மேலும், 2023 - 2024 ஆண்டில், நீரேற்று திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் பங்களிப்பாக, 6.83 லட்சம் ரூபாய் வழங்கினார்.
இதில், மழைக்காலத்தில் ஜம்பேறி ஏரியை வந்தடையும் உபரி நீரை நீரேற்றம் செய்ய முடிவு செய்தனர். இதில், 1 கி.மீ., நீளத்திற்கு, 200 மி.மீ., அகலம் கொண்ட குழாய்கள் பதித்து, 30 ஹெச்.பி., மின் மோட்டார் பொருத்தப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தில், 20.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த, 6 மாதங்களாக பணிகள் நடந்த நிலையில், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சென்றாயனஹள்ளி ஏரி, 33 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது நிரம்பியதும், தொன்னையனஹள்ளி ஏரி, அம்மா குட்டை உள்ளிட்டவை, அடுத்தடுத்து நிரம்பும் வகையில் வாய்க்கால்கள் உள்ளன. நீரேற்று திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், விரைவில் தர்மபுரி கலெக்டர் சாந்தி இதை தொடங்கி வைக்க உள்ளார்.
இது குறித்து, கோவிலுார் பஞ்., தலைவி தமிழ்செல்வி கூறுகையில், ''மாவட்ட கலெக்டர் முழு ஒத்துழைப்பு அளித்ததால், இத்திட்டம் நிறைவேறி உள்ளது. இதன் மூலம், 1,000 விவசாய குடும்பங்கள், 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் கனிசமாக உயரும். மேலும், எண்ணேகோல்புதுார் - தும்பலஹள்ளி அணை திட்டம் முழுமை அடைந்து வரும் நிலையில், தொடர்ந்து பூலாப்பட்டி ஆற்றில் தண்ணீர் வரும்போது, எங்கள் ஏரிக்கு நீரேற்று மூலம், தண்ணீர் நிரப்பி எங்கள் பஞ்., செழிப்படையும். இவ்வாறு, அவர் கூறினார்.