/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்குறுதி அளித்தும் வாய் திறக்காத முதல்வர் ; கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் அம்போவா?
/
வாக்குறுதி அளித்தும் வாய் திறக்காத முதல்வர் ; கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் அம்போவா?
வாக்குறுதி அளித்தும் வாய் திறக்காத முதல்வர் ; கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் அம்போவா?
வாக்குறுதி அளித்தும் வாய் திறக்காத முதல்வர் ; கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் அம்போவா?
ADDED : ஆக 19, 2025 01:33 AM
அரூர்; தர்மபுரி அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே, 17.35 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மூலம், 6,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
மழைக்காலங்களில் தடுப்பணையில் வெளியேறும் உபரி நீரை, நீரேற்று திட்டம் வாயிலாக மொரப்பூர், நவலை, கம்பைநல்லுார், செங்குட்டை, சின்னாகவுண்டம்பட்டி, கடத்துார், சிந்தல்பாடியிலுள்ள 66 ஏரிகளை நிரப்ப, விவசாயிகள் வலியுறுத்தினர்.
வலியுறுத்தல்
இதன்படி, 2019 ஜூலையில், இது குறித்த ஆய்வுக்கு, 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. ஆய்வு முடித்து, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பின், 2020 பட்ஜெட்டில், 410 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில், இத்திட்டம் கிடப்பில் உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்தினால், 56 பஞ்.,களில், 8,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் பிரச்னை தீரும். நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும்' என, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உறுதியளித்தார்.
விவசாயிகள் ஏமாற்றம்
மேலும், 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ஒடசல்பட்டியில் நடந்த கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி, கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என, வாக்குறுதி அளித்தார்.
இதனால், இரு நாட்களுக்கு முன் தர்மபுரியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின், கே.ஈச்சம்பாடி நீரேற்று திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என, நம்பிக்கையுடன் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், அறிவிப்பு எதுவும் வெளியிடாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
மொரப்பூர் நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்க தலைவர் ஜெயபால் கூறுகையில், ''முதல்வர் வாய் திறக்காதது வருத்தம் அளிக்கிறது. செப்., 5ம் தேதிக்கு மேல் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்,'' என்றார்.