தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மக்களின் பிரச்னைகளை தீர்க்காமல் மக்களை கடனாளி ஆக்கியதே தி.மு.க.,வின் சாதனை

மக்களின் பிரச்னைகளை தீர்க்காமல் மக்களை கடனாளி ஆக்கியதே தி.மு.க.,வின் சாதனை

மக்களின் பிரச்னைகளை தீர்க்காமல் மக்களை கடனாளி ஆக்கியதே தி.மு.க.,வின் சாதனை


ADDED : ஏப் 10, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 05:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி : ''தமிழகத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியும், மக்களுக்கான பிரச்னைகளை தீர்க்காமல், மக்களை கடனாகிகள் ஆக்கியதே, தி.மு.க.,வின் சாதனை,'' என, பா.ம.க., வேட்பாளர் சவுமியா பேசினார்.

தர்மபுரி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணியில் போட்டியிடும், பா.ம.க., வேட்பாளர் சவுமியா, நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகர்கூடல், கழனிகாட்டூர், மத்தாளபள்ளம், சவுளுகுட்டை, பேபின மருதஹள்ளி, சந்தாரப்பட்டி உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, வேட்பாளர் சவுமியா பேசியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை, பா.ம.க., தான் பல கட்ட போராட்டம் நடத்தி கொண்டு வந்தது. ஆனாலும், மாவட்டத்தில் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால், ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதை தவிர்க்க, 2ம் கட்ட கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம், அ.தி.மு.க., அரசின் மூலம், பா.ம.க., கொண்டு வந்து நிறைவேற்றும். கிராம பஞ்.,களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தவரை ஓரளவுக்கு பிரச்னைகளை கவனித்து சரிசெய்தனர். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் தனி அலுவலக அலுவலர்கள் கட்டுப்பாட்டில் வந்தபின், கிராம பஞ்.,களில் எந்த ஒரு பணியும் சரிவர நடப்பதில்லை. இதனால், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். தி.மு.க., அரசு கடந்த, 5 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. ஆனால், தமிழக மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதையும் செய்யவில்லை. வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த தொழிற்சாலைகளையும் உருவாக்கவில்லை. கடன் வாங்கியும் பிரச்னைகள் தீராத நிலைதான் உள்ளது. தமிழக மக்களை கடனாளிகள் ஆக்கியது மட்டுமே, தி.மு.க.,வின் சாதனையாக உள்ளது. இந்த கடன்களை எல்லாம் தீர்க்க சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்தி, மீண்டும் நம்மிடம் வசூலிப்பார்கள்.

ஆற்றின் குறுக்கே பாலம்

நாகர்கூடல் பஞ்., உட்பட்ட மத்தாளபள்ளம் கிராமத்தில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தேவைக்காக, நாகாவதி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளீர்கள். கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் பாலம் கட்டபடும் என வாக்குறுதி அளித்த, தி.மு.க., அரசு கடந்த, 5 ஆண்டுகளில் இதை கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே, நாகர்கூடல் பஞ்.,ல் பல்வேறு வளர்ச்சி பணிகளை, பா.ம.க., - எம்.எல்.ஏ., தான் செய்துள்ளார். அதேபோல், பாலம் கட்டும் பணியை, பா.ம.க., நிச்சயம் செய்து தரும். இதனால், உங்கள் கிராமத்திற்கு, 7 கி.மீ., சுற்றிவர வேண்டிய நிலை இருக்காது.

தர்மபுரி மாவட்டதிற்கு கடந்த, 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி இருந்தால், மாவட்டத்திலுள்ள அத்தனை நீர்ப்பாசன திட்டங்களையும் நிறைவேற்றி, அரசுக்கு வருவாய் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், தி.மு.க., அரசு செய்யவில்லை.

இளைஞர்கள், பள்ளி சிறுவர்களிடையே போதைபொருள், போதை சாக்லேட் கலாசாரம் வேகமாக பரவி, அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது. இதை பற்றி, தி.மு.க., அரசுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. வளரும் அடுத்த தலைமுறை பாழாவதை கண்டு அவர்கள் துளிகூட வருத்தப்படவில்லை.

எனவே, கட்டுக்கோப்பான ஒரு கட்சியை நடத்தும், இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சி தான் தமிழகத்தில் அமைய வேண்டும். எனவே, அ.தி.மு.க., தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணி தான் ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் எனக்கு மாம்பழம் சின்னத்தில் நீங்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும். இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல் விவசாய கல்வி கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் நிவாரண தொகையாக, 10,000 ரூபாய் மற்றும் பிரிட்ஜ் வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது, அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us