/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறுத்தை கூண்டை மூடி வைத்துள்ள வனத்துறை
/
சிறுத்தை கூண்டை மூடி வைத்துள்ள வனத்துறை
ADDED : மார் 07, 2024 02:36 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே, தண்டரை பஞ்.,க்கு உட்பட்ட சனத்குமார் காட்டாறு பகுதி, இஸ்மாம்பூர், அடவிசாமிபுரத்தில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிகிறது. கடந்தாண்டு செப்., 28 ல், சனத்குமார் நதி அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை தாக்கி கொன்ற சிறுத்தை, தனியார் ரிசார்ட்டை ஒட்டிய லேஅவுட் பகுதியில், ஓய்வுபெற்ற டாக்டரின் நாயை கடித்து கொன்றது.
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை வைத்துள்ளனர். சனத்குமார் காட்டாற்று பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால், சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைகலபுரம், தண்டரை, இஸ்லாம்பூர், பென்னங்கூர் உட்பட, 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து ஆடுகளை சிறுத்தை கொன்று வருகிறது.
அடுத்த மாதம் அடவிசாமிபுரம் அருகே உள்ள மதனகிரி முனீஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா நடக்கும் நிலையில், பக்தர்கள் இரவில் கோவிலுக்கு வந்து செல்வர். அச்சமயத்தில் சிறுத்தையால் பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், சிறுத்தையை பிடிக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, தனியார் ரிசார்ட் பகுதி லேஅவுட்டில் வனத்துறையினர் வைத்துள்ள கூண்டு மூடி கிடக்கிறது. அதனால் சிறுத்தை சிக்க வாய்ப்பில்லாத நிலையால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து, வனத்துறையினரிடம் கேட்டபோது, 'கூண்டு பக்கம் சிறுத்தை வருவதில்லை. தனியார் ரிசார்ட்டை சுற்றியுள்ள மலைகளில் இருந்து நாய்களை நோட்டமிடும் சிறுத்தை, அவற்றை கொன்று இழுத்து சென்று விடுகிறது. தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை பிடிக்க, வனத்துறையினர் தீவிரமாக உள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் கூண்டுக்குள் இறைச்சியை வைத்து, அதை கவர்ந்து, டாக்டர்கள் குழு உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்துள்ளோம்' என்றனர்.

