ADDED : ஜூலை 22, 2025 02:07 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், த.மா.கா., இளைஞரணி சார்பில், நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து, அதில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை, பெரம்பூரில் கடந்த, 15 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான திருச்சி சிவா தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றி, உண்மைக்கு புறம்பாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் அவதுாறாக பேசியுள்ளார். காமராஜரை தலைவராக கொண்டாடும் லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகள் மற்றும் தேசிய சிந்தனை கொண்டவர்களை கடுமையாக பாதித்துள்ளது. மேலும், ஒரு சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய, திருச்சி சிவா மீது, வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, கைது செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்தனர்.இதில், த.மா.கா., தர்மபுரி மத்திய மாவட்ட தலைவர் புகழ், இளைஞரணி தலைவர் நவீன், நகர தலைவர் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் பாபு, மேற்கு மாவட்ட தலைவர் சுமன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.