த.வெ.க., ஆதரவு ஓசூர் எம்.எல்.ஏ., மீண்டும் இ.பி.எஸ்., பக்கம்
த.வெ.க., ஆதரவு ஓசூர் எம்.எல்.ஏ., மீண்டும் இ.பி.எஸ்., பக்கம்
ADDED : மே 27, 2026 06:36 AM

ஓசூர்:விஜய் தலைமையிலான தமிழக அரசிற்கு ஆதரவு தெரிவித்த ஓசூர் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணாரெட்டி, மீண்டும், இ.பி.எஸ்., பக்கம் தாவினார்.
கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி. இவர் தன்னை, கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விசுவாசியாக காட்டிக்கொண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 'சீட்' பெற்று வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ.,க்கள் வேலுமணி, சண்முகம் தலைமையில் செயல்படும் எதிரணியுடன் சேர்ந்து, விஜய் தலைமையிலான அரசிற்கு, நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஆதரவு தெரிவித்தார். அதனால் அவரது மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை பறித்து, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக இருந்த ராமுவை மாவட்ட செயலாளராக நியமித்து,பொதுச்செயலாளர்
இ.பி.எஸ்., உத்தரவிட்டார்.
இந்நிலையில், பாலகிருஷ்ணாரெட்டி, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய போவதாக நேற்று காலை தகவல் பரவியது. ஆனால், அவரது ஆதரவாளர்கள் அதை மறுத்த நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சை நேற்று சந்தித்த அவர், மீண்டும் தன்னை, இ.பி.எஸ்., ஆதரவாளராக இணைத்து கொண்டார்.
இது குறித்து, அ.தி.மு.க.,வினர் கூறுகையில், 'த.வெ.க., அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் பாலகிருஷ்ணாரெட்டி எம்.எல்.ஏ.,வுக்கு, அமைச்சர் பதவி கிடைக்கும் என பேசப்பட்டது. ஆனால், த.வெ.க., அரசிற்கு ஆதரவளித்த, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும், இ.பி.எஸ்., பக்கம் வந்துள்ளார்' என்றனர்.
