ADDED : ஏப் 25, 2026 05:29 AM
தர்மபுரி, தர்மபுரி அருகே, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லுாரியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்திற்கு, தேர்தல் பொதுப்பார்வையாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமையில் நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழக சட்டசபை தேர்தல் கடந்த, 23ம் தேதி தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 சட்டசபை தொகுதிகளிலும் நடந்தது. ஓட்டுப்பதிவு செய்யபட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தர்மபுரி அருகே செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் ஹீராலால், வந்தனா வைத்யா, மாவட்ட தேர்தல் அலுவலர் சதீஸ் ஆகியோர் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று 'சீல்' வைக்கப்
பட்டது.இதையடுத்து, கலெக்டர் சதீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரங்களை ஓட்டு எண்ணும் மே, 4ம் தேதிவரை, 330 ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர், 24 மணி நேரமும் கண்காணிக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது.
மூன்றடுக்கு பாதுகாப்பு அறையில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க, 24 மணி நேரமும், 185 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கண்காணிப்பு பணியை பார்வையிட அனுமதிக்கப்படுவர். மூன்றடுக்கு பாதுகாப்பு பகுதிகளில் தடையில்லா மின்சாரம் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் கால அட்டவணைபடி, ஓட்டு எண்ணும் நாளன்று திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், டி.ஆர்.ஓ., கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வி, கோபு, காயத்ரி, கோவிந்தன், செம்மலை உட்பட தொடர்புடைய அலுவலர்கள்
உடனிருந்தனர்.
