தொப்பையாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தொப்பையாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ADDED : பிப் 06, 2026 10:09 AM

தர்மபுரி: தர்மபுரி அடுத்த தொப்பையாறு அணையில் இருந்து, பாசனத்திற்காக மாவட்ட கலெக்டர் சதீஷ் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணை, 50 அடி உயரம், 298.6 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏற்காடு மலை மற்றும் பொம்மிடி, ஊத்துப்பள்ளம் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து, வேப்பாடி ஆற்றின் மூலம், தொப்பையாறு அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்தாண்டு பருவமழையால், முழு கொள்ளளவை அணை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 அடி வரை மட்டுமே எட்டியது. இதனிடையே அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நேற்று அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து, அணை மதகின் ஷட்டரை பிடித்து தண்ணீரை திறந்து வைத்தார். அணையிலிருந்து, 48 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம், தர்மபுரி மாவட்டம், தொப்பூர், கம்மம்பட்டியை சேர்ந்த, 2,050 ஏக்கர் மற்றும் சேலம் மாவட்டம், செக்காரப்பட்டி, வெள்ளார், தெத்திகிரிப்பட்டி, மல்லிகுந்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த, 3,280 என, மொத்தம், 5,330 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீர்வளத்துறையினருடன் ஒத்துழைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக விளைச்சல் பெறும் நோக்குடன் செயல்பட, நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
நிகழ்ச்சியில், தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் கிருபா மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
