ADDED : ஏப் 29, 2026 05:54 AM
பாலக்கோடு: பாலக்கோடு டவுன் பகுதியில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகி வருகிறது. இதை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு டவுனில், பாலக்கோடு - தர்மபுரி செல்லும் பிரதான சாலையோரமுள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில், உடைப்பு ஏற்பட்டு கடந்த, 10 தினங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. மாவட்டத்தில், கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த, 10 தினங்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக சென்று வருகிறது. இது குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவித்தும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றசாட்டு தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
