/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிணறுகள், நீர்நிலைகள் வறண்டன: குடிநீருக்கு தவிக்கும் வத்தல்மலை மக்கள்
/
கிணறுகள், நீர்நிலைகள் வறண்டன: குடிநீருக்கு தவிக்கும் வத்தல்மலை மக்கள்
கிணறுகள், நீர்நிலைகள் வறண்டன: குடிநீருக்கு தவிக்கும் வத்தல்மலை மக்கள்
கிணறுகள், நீர்நிலைகள் வறண்டன: குடிநீருக்கு தவிக்கும் வத்தல்மலை மக்கள்
ADDED : ஏப் 27, 2024 06:54 AM
வத்தல்மலை : வத்தல்மலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், கிணறுகள், நீர்நிலைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மலை கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து, 3,000 அடி உயரத்திலும், தர்மபுரி நகரில் இருந்து, 25 கி.மீ., தொலைவில் வத்தல்மலை உள்ளது. இதில், சின்னாங்காடு, பால்சிலம்பு, பெரியூர், ஒன்றிக்காடு, கொட்லாங்காடு, மண்ணாங்குழி, குழியனுார், -பெரியூர், நாயக்கனுார் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு, 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மலை கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரங்களாக, அங்குள்ள நீரோடைகள், கிணறுகள் உள்ளிட்டவை இருந்தன. இவை ஆண்டு முழுவதும் வற்றாமல், தண்ணீர் நிறைந்திருக்கும். இந்த நிலையில், கடந்த ஆண்டு, தர்மபுரி மாவட்டத்தில் பருவ மழை அளவு வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சி காரணமாக, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், வத்தல்மலை கிராமங்களிலும் இந்தாண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இங்குள்ள தடுப்பணைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக வறண்டு விட்டது.குறிப்பாக பெரியூர் பகுதியில் இரண்டு பொதுக்கிணறுகள் உள்ளன. அதில், ஒரு கிணற்றில் மின் மோட்டார் பொருத்தி, மேல்நிலை நீர் தொட்டிக்கு தண்ணீர் நீரேற்றம் செய்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அந்த கிணறும் முழுமையாக வற்றியதால், மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்ய முடியவில்லை. அதன் அருகில் உள்ள மற்றொரு கிணற்றிலும், 2 அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அதிகாலை, 5:00 மணி முதல் கயிறுகள் மூலம் பக்கெட்டுகளை கட்டி தண்ணீர் எடுத்து வருகின்றனர்.இதில், குறைந்த அளவில் தண்ணீர் இருப்பதால், சேறு கலந்து வருகிறது. எனவே, துணிகளை குடத்தின் மேல் வைத்து, வடிகட்டி பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சில இடங்களில் தண்ணீர் அறவே இல்லாததால், மலை அடிவாரத்தில் இருந்து டிராக்டர்கள் மூலம், பணம் கொடுத்து தண்ணீரை வாங்கிச் செல்கின்றனர்.வத்தல்மலை கிராமங்களில் முதல் முறையாக, ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை அப்பகுதி மக்கள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க, ஆழ்துளை கிணறுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

