/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கணவர் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது
/
கணவர் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது
ADDED : ஆக 28, 2024 08:25 AM
ஓசூர்: ஓசூரில், கணவர் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே கூர்க்கம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 45; கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி, 35. இவர்களுக்கு, பிளஸ் 2 படிக்கும் 17 வயது மகளும், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மகனும் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டில் குடும்பத்துடன் கோவிந்தராஜ் வசித்தார்; மனைவி நந்தினி, காபி ஷாப்பில் பணியாற்றி வந்தார். அவரது நடத்தையில் சந்தேகமடைந்த கோவிந்தராஜ், குடி போதையில் அடித்து துன்புறுத்தி வந்ததோடு, வேலைக்கு செல்லாமல், குடிக்க பணம் கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவருக்கும், நந்தினிக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று அதிகாலையில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினரை எழுப்பிய நந்தினி, படுக்கையில் சிறுநீர் கழித்த நிலையில், கணவர் கோவிந்தராஜ் அசைவின்றி கிடப்பதாக தெரிவித்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனை செய்த டாக்டர், கோவிந்தராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையில், கழுத்தை நெரித்து கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. மனைவி நந்தினியிடம், ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கணவர் குடித்து விட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு குடி போதையில் அடித்ததால், கழுத்தை நெரித்து கொன்றதாகவும் நந்தினி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர்.