/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கல்லாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டப்படுமா?
/
கல்லாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டப்படுமா?
ADDED : டிச 27, 2024 01:00 AM
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 27---
கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி கூட்ரோடு பகுதியில் கல்லாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றைக் கடக்க ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அவல நிலை உள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்துார் ஒன்றியம் புட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் அண்ணாநகர், குரும்பன் கொட்டை, பாலஒட்டு, புட்டிரெட்டிப்பட்டி கூட்ரோடு, ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட, 9 கிராமங்கள் உள்ளன. இதில் நரசிம்மசாமி மலைபகுதி, மணல்மேடு பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
அப்பகுதியில் பசுமையான தோட்டங்கள், குடிநீர் வசதி என இயற்கையோடு வாழும் கிராம மக்களுக்கு மழைக்காலம் என்றாலே கஷ்டமான நிலை உள்ளது. இப்பகுதிக்கு போக்குவரத்து வசதி கிடையாது. மக்கள் நகர பகுதிக்கு வர அங்குள்ள கல்லாற்றினை கடக்க வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் குறைவாக சொல்லும் போதும் ஆறு வறண்டு கிடக்கும் காலங்களில் மக்கள் ஆற்றை எளிதாக கடக்கின்றனர். மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஆற்றை கடக்க முடியாமல் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், விவசாயிகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த கல்லாற்றின் குறுக்கே பாலம் கட்ட வலியுறுத்தி அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த 'பெஞ்சல்' புயலின் போது ஆற்றில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு எடுத்து இப்பகுதியில் கன்டெய்னர் லாரி ஆற்றில் அடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே பொதுமக்கள் எளிதாக சென்று வர இந்த ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.