/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
14 வயது சிறுமியை கடத்தியதொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
/
14 வயது சிறுமியை கடத்தியதொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
ADDED : டிச 18, 2024 01:43 AM
தர்மபுரி, டிச. 18-
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, எண்டப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டியன், 31. இவர் கடந்த, 2015- மே, 3- அன்று, 14 வயது சிறுமியை திருமணம் செய்யும் நோக்கத்துடன் கடத்திச் சென்றார். சிறுமியின் பெற்றோர் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில், பாண்டியனை கைது செய்தனர்.
இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிந்த நிலையில், குற்றவாளி பாண்டியனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சிவஞானம் நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜரானார்.
மழை பாதித்த மக்களுக்கு உதவி
கிருஷ்ணகிரி, டிச. 18-
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில், மழையால் பாதித்த மக்களுக்கு, பெங்களூரு இன்போசிஸ் அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாஷ்ரமத்துடன் இணைந்து, நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நேற்று துவங்கியது.
இதுகுறித்து, ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாஷ்ரம சுவாமி ஜெகாபானந்தா நிருபர்களிடம் கூறியதாவது: இன்போசிஸ் அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாஷ்ரமத்துடன் இணைந்து கடந்த, 32 ஆண்டுகளாக இயற்கை பேரிடர்களால் பாதித்த மக்களுக்கு, பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். குறிப்பாக, தமிழகத்தில் கடந்தாண்டு கனமழையால் பாதித்த துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் சென்னையிலும் நிவாரணம் வழங்கி உள்ளோம். தற்போது பெஞ்சல் புயல் பாதித்த புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குகிறோம். முதல்கட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (நேற்று) 1,000 பேருக்கு, தலா, 3,000 ரூபாய் மதிப்பிலான அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட பை வழங்கப்படுகிறது. 2வது கட்டமாக, 1,000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.