/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரஷர் வெடி, வாகனங்களால் கொத்தப்புள்ளியில் பாதிப்பு குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார பிரச்னைகள் தாராளம்
/
கிரஷர் வெடி, வாகனங்களால் கொத்தப்புள்ளியில் பாதிப்பு குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார பிரச்னைகள் தாராளம்
கிரஷர் வெடி, வாகனங்களால் கொத்தப்புள்ளியில் பாதிப்பு குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார பிரச்னைகள் தாராளம்
கிரஷர் வெடி, வாகனங்களால் கொத்தப்புள்ளியில் பாதிப்பு குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார பிரச்னைகள் தாராளம்
ADDED : பிப் 18, 2026 07:27 AM

ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளியில் ரோடு, கண்மாய்களில் கழிவுகள் குவிப்பு, ஆக்கிரமிப்புகளால் தூர்ந்த
வரத்து வாய்க்கால், தெருக்களில் தேங்கும் அசுத்த நீர், குடிநீர் வினியோக குளறுபடி பிரச்னைகளால் கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் -பழநி ரோட்டில் ரெட்டியார்சத்திரத்தை மையமாகக் கொண்டு கொத்தப்புள்ளி ஊராட்சி உள்ளது. இதனை சுற்றிலும் கொத்தப்புள்ளி, தாதன்கோட்டை, பொம்மனங்கோட்டை, கெம்மனம்பட்டி, வேலம்பட்டி என 8க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விஸ்தரிப்பு பகுதிகளைச் சுற்றிலும் சில ஆண்டுகளாக குடியிருப்புகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 900க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இருப்பினும் போதிய அடிப்படை வசதிகளின்றி இப்பகுதியில் வசிப்போர் தவித்து வருகின்றனர். சில கிராமங்களில் குண்டும் குழியுமான தெருக்களில் போக்குவரத்து வசதிக்காக அவதிப்பட்டு வருகின்றனர். பல மாதங்களாகியும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி முழுமை பெறவில்லை. பெரும்பாலான வார்டுகளில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. தெருக்களில் அசுத்த நீர் தேங்குகிறது.
ஒன்றிய அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், வங்கிகள், அரசு அலுவலகங்கள் என தினமும் நுாற்றுக்கணக்கான மக்களின் நடமாட்ட பகுதியாக ரெட்டியார்சத்திரம் உள்ளது. தாதன்கோட்டை, பொம்மனங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தனியார் கிரஷர்கள் பல இயங்குகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உரிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இப்பிரச்னையால் ரெட்டியார்சத்திரம் பகுதியில் வசிப்போர் மட்டுமின்றி இப்பகுதியை கடந்து செல்வோரும் மூச்சு திணறல், இதய நோய், காது கேட்கும் தன்மை பாதிப்பு போன்ற பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக கண்காணிக்கவும், அடிப்படை பிரச்னைகள் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
கிரஷர் வெடி, லாரிகளால் அவதி தயாளன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி, ரெட்டியார்சத்திரம் : அரசு விதிகளுக்கு புறம்பாக பல குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் அதிக திறன் கொண்ட வெடி பயன்பாடு காற்று மாசுபடுத்தும் விதிமீறல் தாராளமாக உள்ளது. இப்பகுதி கிராமங்களில் கிரஷர் தூசி, அடர் புகை சூழ்ந்து மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாற்றி வருகின்றன. வெடி அதிர்வுகளால் வீடுகள் சேதமடையும் அவலம் பல ஆண்டுகளாக தொடர்கிறது. வசிப்போர் மட்டுமின்றி இப்பகுதிக்கு வந்து செல்வோரும் சுவாச, இதய நோயாளிகளாக மாறும் பரிதாபம் தொடர்கிறது.
தண்ணீர் திருட்டு தாராளம் ராமச்சந்திரன், பா.ஜ., விவசாய அணி ஒன்றிய தலைவர், கெம்மனம்பட்டி : ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பின்றி மண் மேவியுள்ளது. மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தெருக்களில் தேங்குகிறது. கொசுத்தொல்லை அதிகரித்து தொற்றுநோய் பாதிப்பு வாடிக்கையாகிவிட்டது.
கெம்மனம்பட்டி, கதரணம்பட்டி, தோப்புப்பட்டி, கொத்தப்புள்ளி பகுதிகளில் போதிய சுகாதாரமற்ற சூழலில் குடிநீர் வினியோகம் நடக்கிறது. வசதி படைத்த செல்வாக்கு மிக்க பலர் மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடுகின்றனர். சில இடங்களில் தற்போது போதிய அளவு நிலத்தடி நீர் இருந்தும் வினியோகத்தில் குளறுபடி நீடிக்கிறது. சுகாதாரம், ரோடு பராமரிப்பில், ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் நீடிக்கிறது.--

