/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலில் 3000 போலீசார் பாதுகாப்பு
/
பழநி முருகன் கோயிலில் 3000 போலீசார் பாதுகாப்பு
ADDED : பிப் 10, 2025 05:25 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து 3000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பழநி முருகன் கோயிலில் நாளை தைப்பூச திருவிழா நடக்க உள்ள நிலையில் திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மாவட்ட 3 எஸ்.பி தலைமையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. சி.சி.டி.வி., மூலம் கண்காணிப்பு செய்கின்றனர். கோவை, திண்டுக்கல், நாமக்கல் பகுதியிலிருந்து தீயணைப்பு துறை அலுவலர்கள் வரவழைக்கப்பட்டனர். 10 தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. இடும்பன் குளம், சண்முகா நதி ஆகியவற்றில் ரப்பர் படகின் மூலம் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தற்காலிக பார்க்கிங் வசதிகள் 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் அமைக்கப்பட்டது.
கோயில் சார்பில் அடிவாரம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து குடமுழுக்கு மண்டபம் வரை குடிநீர் வசதி புதிதாக அமைக்கப்பட்டு கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து நேற்று துவங்கி வைத்தார்.
பக்தர்களுக்கு தொன்னையில் பிரசாதம் வழங்கப்படுகிறது. இடும்பன் கோயில் அருகே உள்ள விடுதிக்கு வாகனங்களை அனுமதிக்க மறுத்ததால் வாகனங்களில் வந்தவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காலையில் அரசு பஸ்களை குளத்துார் ரோடு பகுதியில் நிறுத்தியதால் வாகனங்களில் வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
பக்தர்கள் கிரிவிதியில் வலம் வரும் போது கோலாகலமாக காவடி ஆட்டம் ஆடி,மேள தாளங்களுடன் வந்தனர்.
ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்குச் செல்லும் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர் பாட்டில்கள், கனிகள் வழங்கப்பட்டது. சில இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வேலப்பரை தரிசனம் செய்தனர்.

