sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அளவில்லா மகிழ்ச்சியை அள்ளி தரும் ஆடி பெருக்கு

/

அளவில்லா மகிழ்ச்சியை அள்ளி தரும் ஆடி பெருக்கு

அளவில்லா மகிழ்ச்சியை அள்ளி தரும் ஆடி பெருக்கு

அளவில்லா மகிழ்ச்சியை அள்ளி தரும் ஆடி பெருக்கு


ADDED : ஆக 03, 2024 05:01 AM

Google News

ADDED : ஆக 03, 2024 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடி 18ம் நாளில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா நதிக்கரை, ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆடி 18ல்தான் விவசாயிகள் உழவுப் பணிகளை தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்றும் சொல்வதுண்டு. நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளை தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கு நகை வாங்கவும் உயர்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால் புண்ணியம் எப்படி பெருகுகிறதோ அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை என்பர். ஆனால் ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.

காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். இந்நாளில் தங்கள் இல்லத்தை அலங்கரித்து பூஜை புனஷ்காரங்களுடன் அனுஷ்டிக்கலாம். குறிப்பாக இந்தாண்டின் ஆடிப் பெருக்கு கிழமை, நட்சத்திரம், திதி, யோகம் என அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளது.

புதுமணத்தம்பதிகளுக்கு உகந்த நாள் -லிங்அருண் ,- வனஜா, புதுமணத்தம்பதி , திண்டுக்கல். சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டோம் . இதுதான் முதல் ஆடிப்பெருக்கு. திருமணம் முடித்த புதுமணத் தம்பதிகளுக்கு இந்த ஆடி 18 என்பது மிகவும் முக்கியமானது என்பர். புதுமணத்தம்பதிகள் ஆடி பெருக்கு தினத்தில் மனைவிமார்களுக்கு அவர்களது கணவர்கள் தாலி பிரித்து மஞ்சள் கயிற்றில் புது தாலியை அணிவிப்பார்கள். இதனை புதுமணத் தம்பதிகள் மாட்டுமல்லாது சுமங்கலி பெண்களும் புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றிக் கொள்வார்கள். ஆடி 18 நாளான இன்று ஆற்றில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். அதன்படி நாங்களும் புதுமஞ்சள் கயிறும் மாற்றிக் கொள்ள உள்ளோம். குடும்ப வளர்ச்சிக்கு நல்லது


வி.பிரேமா விஜயன், குடும்பத் தலைவி, கன்னியாபுரம்:ஆடி மாதம் வந்தாலே பெண்கள் பல வழிபாட்டு முறைகளை பின்பற்றத் தொடங்கி விடுகின்றனர்.ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தப்படுத்தி மாலை 6 :00 மணிக்குள் விளக்கிற்குப் பூ வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டின் சுற்றுப்புறம் துாய்மையாக இருப்பதோடு மட்டுமின்றி மனமும்துாய்மையாக இருக்கும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பொங்கல் பிரசாதம் கொடுத்து வழிபடலாம். நான் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது வழக்கம்.கோயில்களுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டிலே பொங்கல் வைத்து அருகில் உள்ளவர்களுக்கு பிரசாதத்தை பரிமாறுவேன்.ஆடி மாதம் வரக்கூடிய ஆடிப்பூரம் மிகுந்த விசேஷ நாளாகும். குழந்தையில்லாத பெண்கள் இந்த நாளில் பெண்களுக்கு வளையல், புதிய சேலைகள் வாங்கிக்கொடுக்கலாம். இல்லையென்றாலும் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும் ஆடிப்பூர நாளில் கோயில்களுக்கு சென்று அம்மனை வழிப்படுவது சிறப்பு .

பல மடங்காக பெருகும்


வாராகி சஞ்சீவி சுவாமிகள், கம்பிளியம்பட்டி: ஆடிப்பெருக்கு அன்று செய்யப்படும் வழிபாடு, தான தர்மங்கள், துவங்கும் செயல்கள் ஆகியவற்றின் பலன்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப் பெருக்கு மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த புனிதமான நாளில் விவசாயம் செழிக்க உதவுவதால் நீரை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.காவிரி அன்னையை தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு மதித்து இந்த நாளில் வழிபடுவது சிறப்பு. ஆடி மாதத்தில் பெய்யும் மழையால் பொங்கி வரும் காவிரி ஆற்றின் நீர் கடைமடை வரை பாய்ந்து ஓடுவதற்கு15 நாட்களாவது தேவைப்படும் என்பதாலே ஆடி மாதத்தின் 18வது நாளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் பழக்கம் உருவானது. ஆடிப் பெருக்கு அன்று அனைத்து தெய்வங்களின் சக்தியையும் காவிரி தாய் தான் வாங்கிக் கொண்டு மக்களுக்கு வழங்கும் திருநாளாக ஆடிப்பெருக்கு உள்ளது .

தொட்டதெல்லாம் துலங்கும்


-ஆர்.சுப்புராம், பெட்ரோல் பங்க் உரிமையாளர், வடமதுரை:ஆடிப்பெருக்கு என்பது அற்புதமான, உன்னதமான நாள். இந்நாளில் நிலம், வீடு வாங்க முன் தொகை வழங்கலாம். பூமிபூஜை போடலாம். வீட்டு பொருட்கள் வாங்கலாம். விதை இடுவதற்கு அருமையான நாள். ஆடிப்பெருக்கு நாளில் தொட்டதெல்லாம் துலங்கும். புதிய தொழில் துவங்கினால் நல்ல விருத்தியடையும்.

காவிரியின் கரையோரம் உள்ளவர்கள் தான் ஆடிப்பெருக்கு கொண்டாடுவார்கள். நாம் என்ன செய்வது என்று யாரும் கவலைபட வேண்டாம். நம் வீட்டிலே ஆடிப்பெருக்கை அற்புதமாகக் கொண்டாடலாம்.

அம்மனுக்கு உகந்த ஆடி


எஸ்.வசந்தி, குடும்பத் தலைவி ஒட்டன்சத்திரம்: ஆடி மாதம் வந்தாலே அம்மன் கோயில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்துவிட்டு முழுக்க முழுக்க அம்மன்களின் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். குறிப்பாக ஆடி செவ்வாய் ,வெள்ளிக்கிழமையில் மிகவும் விசேஷமானதாகும். ஆன்மிக வழிபாட்டிற்கு சிறந்த மாதமாக இம்மாதம் திகழ்கிறது .ஆடி வெள்ளி தொடங்கி ஆடி 18 ,ஆடி அமாவாசை ,ஆடிப்பூரம் ,ஆடி கிருத்திகை என சிறப்பு வழிபாட்டு தினங்களை கொண்டது ஆடி மாதம்.ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம்.

குலதெய்வ வழிபாடு அவசியம்


ஹேமாதேவி,குடும்பத்தலைவி,திண்டுக்கல்: ஆடிப்பெருக்கு என்பது புதுமண தம்பதிகள் தாலிக்கயிறு மாற்றும் நிகழ்வு வெகு விமரிசையாக நடக்கிறது. இதனால் பலரும் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் இன்ப சுற்றுலா போல் காவிரி போன்ற நதிகளுக்கு சென்று கால் நனைத்து வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் குல தெய்வங்களை வழிபடுவது இந்த நாளில் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. எங்கேயும் செல்லாதவர்கள் வீட்டிலே பூஜை அறையில் மங்களம் தரும் மஞ்சள்,தங்கம் போன்ற பொருட்களை வைத்து தங்களுக்கு இஷ்டமான தெய்வங்களை வைத்து வழிபாடு செய்கின்றனர்.

போற்றுதற்குரிய தொழிலாக


ராமச்சந்திரன்,விவசாயி, ரெட்டியார்சத்திரம் :ஆடி மாதத்தில் புதிய தொழில் துவங்குதலை தவிர்க்க வேண்டும் என கூறும் முன்னோர், ஆடிப்பெருக்கு தினத்திற்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளித்துள்ளனர். 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது முதுமொழி. சூரியனின் தென் திசை பயணத்தை தட்சிணாயன புண்ணிய காலம் என கூறுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாய உழவு பணிகளை துவங்குவர். இந்த நாளில் துவங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது நம்பிக்கை. விவசாயத்தை பொறுத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்தது. இதற்கேற்ப சாகுபடி முறைகளை முன்னோர் வகுத்திருந்தனர். இப்பட்டத்தில் தானிய பயிர்கள், காய்கறிகள் பயிரிடுதல் வழக்கம். ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் காய்கறி, பயறு வகைகள் குறைவான பராமரிப்பில் அதிக விளைச்சல் தரும் எனக்கூறுவர். காலநிலை, மழை, வெப்பம் போன்ற பருவகால மாற்றங்கள் மட்டுமின்றி குறைந்து வரும் விளைநில பரப்பு போன்ற சவால்களை எதிர்கொண்டு தற்காலத்தில் விவசாயம் நடப்பதே போற்றுதற்குரிய தொழிலாக கூறலாம்.

குடும்பங்களுக்கு வாரிசு


செல்வசுப்பிரமணியம், குருக்கள், பழநி: ஆடி 18 சிறப்பான நாள். ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு ,ஆடி கார்த்திகை, ஆடி அமாவாசை சிறப்பான வழிபாடு செய்யக் கூடிய நாட்களாக உள்ளன. ஆடிப்பெருக்கு குலதெய்வ வழிபாட்டுக்கு சிறந்தநாள். ஆடிப்பெருக்கு அன்று நதிக்கரைக்கு சென்று சப்த கன்னியரை வணங்கி மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். திருமணமான பெண்கள் அம்மனை வழிபட்டு தாழிக்கயிறை மாற்றிக் கொள்வர். ஆடிப்பெருக்கு வழிபடுவதால் நல்ல மழை பெய்து பூமி செழிக்கும். ஆடிப்பெருக்கு நாட்களில் முக்கிய நல்ல நிகழ்வுகளை துவங்குவர். நதிகளுக்கு சென்று வழி படுவதால் குடும்பங்களுக்கு வாரிசு ஏற்படும். தீர்க்காயுள் உடன் வாழ்வார்.






      Dinamalar
      Follow us