ADDED : ஏப் 26, 2024 12:39 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பகுதியில் நடப்பட்ட முருங்கை செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, சாலைப்புதுார், அம்பிளிக்கை கப்பலப்பட்டி , கள்ளிமந்தையம், பாலப்பன்பட்டி, அப்பியம்பபட்டி, நால்ரோடு, கரியாம்பட்டி சுற்று கிராமப் பகுதிகளில் செடி முருங்கை அதிகமாக விளைவிக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சில இடங்களில் சின்ன வெங்காயத்துடன் ஊடுபயிராகவும், சில இடங்களில் தனியாகவும் செடி முருங்கையை விவசாயிகள் பயிரிட்டனர். தற்போது செடி முருங்கை நன்றாக வளர்ந்துள்ளதால் அவற்றின் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இதில் விளையும் முருங்கை தரமாக நல்ல சுவையுடன் இருப்பதால் கேரள வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கை ரூ. 20 க்கு விற்பனையாகிறது.
