ADDED : மே 09, 2024 06:12 AM

வேடசந்துார்: தினமலர் செய்தி எதிரொலியாக பாலப்பட்டி ஊராட்சி மோளக்கவுண்டனுார் பிரிவிலிருந்து குருவனுார் செல்லும் ரோட்டின் குறுக்காக இருந்த பாலத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது.
பாலப்பட்டி ஊராட்சி மோளக்கவுண்டனுார் பிரிவிலிருந்து குருவனுார் செல்லும் ரோட்டின் குறுக்காக குடகனாறு அணை கிளை வாய்க்கால் குறுக்கிடுகிறது.
இந்த கிளை வாய்க்கால் ரூ.65 கோடி திட்ட மதிப்பில் புதிதாக சீரமைக்கப்படுகிறது. இந்த சீரமைப்பு பணிக்காக ரோட்டின் குறுக்கே இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி துவங்கிய நிலையில் 2 மாதங்களாக அந்தப் பணி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் போக்குவரத்து சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் நேற்று படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை முதல் பாலத்தில் கலவை இயந்திரங்களைக் கொண்டு பணியாளர்களுடன், புதிய பாலம் அமைக்கும் பணி மீண்டும் துவங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.