ADDED : ஆக 13, 2024 11:50 PM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை விலை திடீரென அதிகரித்து கிலோ ரூ. 150 க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள வடகாடு பெத்தேல்புரம் சிறுவாட்டுக்காடு ,பாச்சலுார், கே.சி.பட்டி சுற்றிய கிராம பகுதிகளில் எலுமிச்சை அதிகமாக பயிரிடப்படுகிறது.
சில நாட்களாக இப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக எலுமிச்சை செடிகளில் இருந்த பிஞ்சுகள், பூக்கள் உதிர்ந்தடன. இதனால் தற்போது எலுமிச்சை வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் நடக்கும் பூஜைகளுக்கு அதிக அளவில் எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக வியாபாரிகள் எலுமிச்சையை அதிகமாக கொள்முதல் செய்ததால் விலை அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.60 க்கு விற்ற எலுமிச்சை நேற்று ரூ.150 க்கு விற்பனையானது.
விலை அதிகரித்துள்ளதால் எலுமிச்சை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடி மாதம் முடிந்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
