ADDED : ஏப் 10, 2024 05:24 AM
திண்டுக்கல் : கோடை வெயில் காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலையானது வழக்கத்தை விட இரு மடங்கு உயர்ந்து விற்பனையானது.
நிலக்கோட்டை,வத்தலக்குண்டு, மாரம்பாடி, கொடைரோடு,வேடசந்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது கோடை காலம் துவங்கி அதிகளவில் வெயில் அடிப்பதால் பல ஊர்களில் தண்ணீர் இல்லாமல் பூச்செடிகள் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
வரத்து குறைந்ததாலும் நேற்று தெலுங்கு வருடப்பிறப்பு காரணத்தினாலும் பூக்களின் தேவை அதிகளவில் இருந்தது. இதனால் பூக்கள் விலை 2 மடங்கு உயர்ந்து விற்பனையானது.கிலோரோஸ் ரூ.140, சம்பங்கி ரூ.150,செண்டுமல்லி ரூ.80, கோழி கொண்டை ரூ.70, விரிச்சி பூ ரூ.120, வாடாமல்லி ரூ.50, மல்லிகை ரூ.600, கனகாம்பரம் ரூ.600, முல்லை ரூ.600,ஜாதி பூ ரூ.500க்கு விற்கப்பட்டது.விலை உயர்வால் மொத்த வியாபாரிகளும்,சில்லறை வியாபாரிகளும் குறைந்தளவிலே பூக்களை வாங்கி சென்றனர்.
