ADDED : மே 20, 2024 06:14 AM

ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவை அதிகரிப்பதற்காக மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கின்றனர் நகராட்சியினர்.
ஒட்டன்சத்திரம் மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரத்தில் மலைகள் சூழ இயற்கை எழில் மிகுந்த பகுதியில் உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,நாட்டின் வனப்பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும். தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதம் ஆக்குவதற்கு தமிழ்நாடு முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். இதைதொடர்ந்து இடையகோட்டையில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இங்கு மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து குறு வனம் போல் காட்சியளிக்கிறது. மழை மேகங்களை ஈர்த்து அடிக்கடி இப்பகுதியில் மழைப்பொழிவை கொடுக்கிறது. நகராட்சி நிர்வாகம் பல வகையான மரங்களை நட்டு வேலி அமைத்து பாதுகாக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் உள்ள 8 வது வார்டில் 160 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அவ்வப்போது தண்ணீர் ஊற்றப்பட்டும் கால்நடைகளால் சேதம் ஆகாமல் இருப்பதற்கு வலைகள்,துணிகளால் வேலிஅமைத்தும் பாதுகாத்து வந்ததால் முன்பு நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது மரங்களாக மாறி வருகின்றன.
பசுமை நகராட்சியாக மாற்றுவோம்
திருமலைசாமி,நகராட்சித் தலைவர்,ஒட்டன்சத்திரம்: அரசுக்கு சொந்தமான காலியிடங்கள், ரோட்டுப் பகுதிகள், குளக்கரைகளில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். மா, புளி, பூவரசு, வேம்பு, புங்கன், அரசமரம் என பல வகையான மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம்.
முன்பு நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாக பராமரித்ததால் தற்போது சிறு மரங்களாக வளர்ந்துள்ளன. ஒட்டன்சத்திரத்தை மரங்கள் சூழ்ந்த பசுமை நகராட்சியாக மாற்றுவதே எங்களது லட்சியம். எனது 8 வது வார்டு பகுதியில் 160 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது. வரும் காலங்களில் இன்னும் அதிகமான மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். அவற்றுக்கு தண்ணீர் ஊற்றி வேலி அமைத்து முறையாக பராமரிக்கிறோம். இதனால் விரைவில் ஒட்டன்சத்திரம் நகராட்சி பசுஞ்சோலையாக மாறும்.
துாய்மையான காற்று கிடைக்கும்
கோபி,மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேசன் பொருளாளர், ஒட்டன்சத்திரம்: மாறிவரும் பருவ நிலைக்கு மிக முக்கியமான காரணம் மரங்களை அழிப்பது தான். புவியின் வெப்பநிலையை குறைக்க மரங்கள் நடுவது மிகவும் அவசியமானது. அதிகமான மரக்கன்றுகளை நடுவதன் மூலம் ஒட்டன்சத்திரம் பகுதியில் வனப்பரப்பு அதிகரிக்கப்படுவதுடன் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். துாய்மையான காற்றை சுவாசிக்க முடியும். சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மரங்கள் நடுவதையும் மரம் நடுவதால் வரும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மரம் வளர்த்தால் தான் மழையை பெற முடியும். மழை பொழிந்தால் தான் நாம் உயிர் வாழ்வதற்கு முக்கியமான குடிநீரை பெற முடியும். இதனை எல்லாம் கருத்தில் கொண்டு ஒட்டன்சத்திரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
