ADDED : ஆக 05, 2026 06:12 PM
குஜிலியம்பாறை, ஆக.6 --
பாளையம் பேரூராட்சிக்கான குப்பைக்கிடங்கு வாண்ட்ராயன்பட்டி அருகே உள்ளது. இங்கு 15 வார்டுகளில் சேரும் குப்பையானது வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு தரம் பிரித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.
இங்கிருந்து பாலிதீன் கவர்கள் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதிக்குள் விழுவது, தீ வைத்து எரிப்பது, தெருநாய்கள் தொல்லை உள்ளிட்டவைகளால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கவேல், ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமையில் அப்பகுதி மக்கள் நேற்று கறவை மாடுகளுடன் திரண்டு ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய செயல் அலுவலர் பாஸ்கரன் 6 மாதங்களுக்குள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
