ADDED : ஜூலை 22, 2026 09:52 PM
திண்டுக்கல், ஜூலை 23
தமிழ்நாடு துாய்மைப் பணியாளர் மேம்பாட்டு திட்டம் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் துாய்மைப் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர்களுக்கான அரசு சேவைகள், நலத்திட்டங்கள் வழங்கும் ‘மெகா’ முகாம் நடந்தது. கலெக்டர் துர்கா துவக்கி வைத்தார். மேயர் இளமதி, மாநகராட்சி கமிஷனர் பிரேம்ஆனந்த், நகர்நல அலுவலர் டாக்டர் முருகானந்த், கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை, திருமண உதவி, மகப்பேறு உதவி, வாழ்வாதார உதவி திட்டங்கள், விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், பணியின் போது உயிரிழப்பு நிவாரணம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உடனுக்குடன் சேவை வழங்கப்பட்டது.
ஜூலை 23ல் (இன்று) அகரம், தாடிக்கொம்பு, எரியோடு, அய்யலூர், வடமதுரை, பாளையம், வேடசந்தூர் ஆகிய பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு வேடசந்துார் சமுதாய கூடத்தில் மெகா முகாம் நடக்க உள்ளது. ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை விண்ணப்பிக்கும் துாய்மைப் பணியாளர்கள் கொண்டு செல்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
