ADDED : மே 23, 2026 11:50 PM

தேவை வனத்துறை நடவடிக்கை
கொடைக்கானல், மே 24-
கொடைக்கானல் நகரில் சுற்றி திரியும் காட்டுமாடுகளால் சுற்றுலா பயணிகள்,பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
கொடைக்கானல் வன சரணாலயத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டுமாடுகள் பெருகியுள்ளன. வனப்பகுதியில் புல், தண்ணீரில்லாத நிலையில் நகரை நோக்கி வருகின்றன. அவ்வப்போது காட்டுமாடுகளால் பயணிகள், உள்ளூர்வாசிகள் தாக்கப்படுகின்றனர். காட்டுமாடுகளை கண்காணிக்க வனத்துறை தனி குழு அமைத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட், மூஞ்சிக்கல், கோக்கர்ஸ்வாக் , குறிஞ்சியாண்டவர் கோயில், அரசு மருத்துவமனை , செவன் ரோடு, ஏரிச்சாலை, வில்பட்டி பகுதியில் ஏராளமான காட்டுமாடுகள் கன்றுகுட்டியுடன் நடமாடுகின்றன. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. நேற்று பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 10 க்கு மேற்பட்ட காட்டுமாடுகள் முகாமிட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். கொடைக்கானலில் நடந்து வரும் மலர் கண்காட்சி, கோடை விழாவை காண ஏராளமான பயணிகள் வரும் நிலையில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நகர் பகுதியில் சுற்றி திரியும் காட்டுமாடுகள், வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
