UPDATED : ஆக 08, 2026 06:59 PM
ADDED : ஆக 08, 2026 06:44 PM
வடமதுரை:வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் 3வது ரயில் பாதை நீட்டிப்பு பணியை மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் விழுப்புரம் இருவழி ரயில் பாதை திட்டம் 2012ல் துவங்கியபோது வடமதுரையை ஹால்ட் ஸ்டேஷனாக தரம் குறைத்து திட்டம் தயாரானது. இப்பகுதியினர் விடாமுயற்சியால் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முழுமையான ஸ்டேஷனாக தொடர்ந்து செயல்பட ரயில்வே அனுமதித்தது.
ஏற்கனவே தாமதமாக நடந்த இருவழிப்பாதை திட்டத்தில் இறுதியாக சேர்க்கப்பட்டதால் வடமதுரையில் குறைந்த துார துணை பாதை, ஜல்லி டெப்போவுக்கு ஒரு பிட் லைன் மட்டும் கூடுதலாக அமைத்து அவசர கதியில் பணி முடிந்தது.
இதனால் வடமதுரை ஸ்டேஷனில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழிவிடும் வகையில் குறைந்த வேக சரக்கு, பாசஞ்சர் ரயில்களை துணை பாதையில் நிறுத்தி வைக்க முடியவில்லை. இக்குறையால் ஓரமாக நிறுத்த வேண்டிய ரயில்களை அய்யலுாருக்கு அடுத்து தாமரைப்பாடிக்கே அனுப்பினர்.
தற்போது வடமதுரையில் 3வது பாதையை மின்மயமாக்கலுடன் நீட்டிப்பு செய்ய ரூ.10.33 கோடியில் பணி நடக்கிறது. நேற்று இவற்றை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார்.
