ADDED : ஏப் 03, 2026 11:10 PM
ஒட்டன்சத்திரம்: அருவியில் குளிக்க சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியில், மேல் தலையூற்று அருவி உள்ளது. பரப்பலாறு அணை நீர் வெளியேறி, தலையூற்று அருவியாக மாறி, இங்கு தண்ணீர் கொட்டுகிறது. அருவியையொட்டி சுழல், புதைகுழிகள் உள்ளன. இதில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இதனால் அருவியில் குளிக்க தடை உள்ளது.
கோடையிலும் தண்ணீர் வருவதால், தடையை மீறி பலர் குளிக்க செல்கின்றனர். அருவி அடிவாரத்தில், பெருமாள், நல்காசிவிஸ்வநாதர் கோவில்கள் உள்ளதால், அங்கு செல்வதாக கூறிவிட்டு, அருவிக்கு சென்று குளிக்கின்றனர்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த, 11 பேர், நேற்று மாலை அருவிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்த போது, ஆடில், 19, சதாம் உசேன், 18, ஆயாஸ், 19, பயாஸ், 19, ஆகியோர் நீரில் மூழ்கினர். உடனிருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியவில்லை. ஒட்டன்சத்திரம் தீயணைப்பு வீரர்கள், நான்கு பேர் சடலத்தை மீட்டனர்.
