/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரக்கன்றுகளை வளர்ப்பதில் முன்னுதாரணமான ஊராட்சி
/
மரக்கன்றுகளை வளர்ப்பதில் முன்னுதாரணமான ஊராட்சி
ADDED : டிச 22, 2025 05:41 AM

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க வில்பட்டி ஊராட்சியில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக வில்பட்டி உள்ளது. சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு அருகில் உள்ள இங்கு இயற்கை சுற்றுச்சூழலுக்கு பஞ்சம் இல்லை.
இங்குள்ள அந்நிய மரங்களுக்கு இடையே ஊராட்சி பகுதியில் சோலை மரங்கள், பழ மரக்கன்றுகளை நடவு செய்து பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சியில் நிழல் குடில்கள் அமைத்து அதில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.
இதில் குமுள், நாவல், சீதா, அவகோடா, கொய்ய, பிச்சிஸ், பேஷன் ப்ரூட், உள்ளிட்ட பலன் தரும் மரங்கள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு இந்த பலன் அளிக்கும் மரக்கன்றுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.
தற்போது 6 மாதத்திற்கு மேலான நிலையில் இவை செழுமையுடன் துளிர்விட்டு நடவுக்கு தயாராக உள்ளது.
பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது நிழல் வலை அமைப்பில் நடவு செய்யப்பட்டுள்ள இவ்வகை மரக்கன்றுகளை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ஊராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மரக்கன்றுகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகள் உயர் அதிகாரியிடம் வரப் பெற்று விநியோகிக்கப்படும். இவற்றை பணியாளர்கள் மூலம் நாள்தோறும் நன்கு கவனித்து வருகின்றோம். ஊராட்சியை பசுமை நிறைந்த பகுதியாக மாற்ற முதற்கட்ட நடவடிக்கை இதுவாகும் என்றார்.

