ADDED : ஏப் 25, 2026 10:15 PM
வடமதுரை:கோடை மழை நேரத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து மின்வாரியத்தினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
மின்வாரிய அலுவலர்கள் கூறியதாவது: கோடையில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யும். அப்போது மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லவோ, தொடவோ முயற்சிக்காமல் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஊழியர்கள் வரும் வரை வேறு அறுந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இடி, மின்னலின் போது வெட்ட வெளியில், மரங்களின் கீழ், மின்கம்பங்கள், மின்கம்பிகள் கீழ் நிற்கக்கூடாது. காங்கீரிட் கூரையிலான கட்டடங்களில் தஞ்சமடையலாம். பாதுகாப்பான கட்டடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் ஒதுங்கலாம்.
மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள், மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது. மழை நேரத்தில் வீட்டு சுவர்களில் நீர்கசிவு இருந்தால் மின்கசிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. அந்த பகுதியில் மின் பயன்பாடு தவிர்க்க வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையது. மின்கம்பி அருகில் மரக்கிளைகளை மரம் வெட்டும் நபருக்கு மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின்கம்பங்கள், அதன் இழுவை கம்பிகளை பந்தல் தூண்களாக பயன்படுத்துவது, கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவது கூடாது என்றனர்.
