ADDED : ஜூலை 26, 2026 12:59 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே மயில் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொருளாளர், கிழக்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச்செயலாளர் எம்.எல்.ஏ., ரவிமனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி., குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு, மாநில ஜெ.,பேரவை இணைச்செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், நகர செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜன், பேரூர், ஒன்றிய, நகர, கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், 'லஞ்சம் இல்லாத அரசு என த.வெ.க., அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. மக்கள் நம்ப வேண்டாம். மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 தருவதாக கூறினார்கள்; இன்னும் தரவில்லை. பழநியில் முறைகேடு பத்திரப்பதிவு விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை இல்லையெனில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.
மேற்கு மாவட்ட செயலாளர் பரமசிவம் பேசுகையில், 'த.வெ.க., அரசு விதிமீறல் மூலம் பத்திரப்பதிவை நிகழ்த்தியுள்ளது. எனவே சி.பி.சி.ஐ.டி., விசாரணையை தவிர்த்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் நிலங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்றார்.
