அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்: நத்தம் விஸ்வநாதன் பிரசாரம்
அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்: நத்தம் விஸ்வநாதன் பிரசாரம்
ADDED : ஏப் 15, 2026 11:06 PM

நத்தம்:''-தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நத்தம் தொகுதியில் செயல்படுத்தப்படும்- ''என நத்தம் வேட்பாளர் விஸ்வநாதன் பிரசாரம் செய்தார்.
நத்தம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் வேம்பார்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட 10- க்கு மேற்பட்ட கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:தமிழக மக்களின் பேராதரவோடு பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 297 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் சாதாரண ஏழை,எளிய மக்கள் விவசாயிகள் முன்னேற்றத்திற்கானவை. இந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்து கொடுத்ததே எனது தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுதான். இதற்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்று பயணம் செய்து தமிழ்நாடு மக்களுடைய விருப்பத்தை கேட்டு ஒரு அருமையான அறிக்கையை தயார் செய்து கொடுத்திருக்கிறோம். அந்த தேர்தல் அறிக்கையில் கூறி உள்ள அத்தனை அறிவிப்புகளையும் நத்தம் தொகுதியில் செயல்படுத்துவோம் .
இல்லங்கள் தோறும் பிரிட்ஜ் வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலம் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும். சிறுபான்மையின பெண்களுக்கு தொழில் செய்ய வட்டி இல்லா கடன் வழங்கப்படும். பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மக்கள் நலன் பெறவும் சமூகம் முன்னேற்றம் அடையவும் போதைப் பொருள் முற்றிலும் அளிக்கப்படும் என்றார். ஜெ பேரவை கண்ணன், அமர்நாத் , ராமராசு, ஹரிஹரன் கலந்து கொண்டனர்.
