ADDED : ஆக 14, 2026 12:42 AM

வேடசந்துார்: வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் கடை செயல்பட எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர், பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே குங்கும காளியம்மன் கோயில் தெருவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட், கோயில்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள இக்கடையை இடம் மாற்றக்கோரி இந்து முன்னணியினர் போராட்டம் அறிவித்தனர். பேச்சுவார்த்தையில் ஒத்தி வைக்கப்பட்டது.
இரண்டாவது கட்ட போராட்டத்தின் போது அதிகாரிகள் தரப்பில் நான்கு நாள் கால அவகாசம் கேட்டனர். அந்த அவகாசம் முடிந்தும் கடையை அகற்றாத நிலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர்.
அப்போது இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் மாரிமுத்து தலைமையில் அப்பகுதி பெண்கள் உள்பட ஏராளமானோர் கடையின் முன் பேரிகார்டு வைத்து மறித்தனர். தொடர்ந்து கடையை திறக்க விடாமல் தடுத்து நிறுத்ததால் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.
கடையை இடமாற்றம் செய்யும் வரை தங்களது அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என இந்து முன்னணியினர், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
