ADDED : மே 29, 2026 04:11 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையுடன் பக்ரீத் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் இமாம் ரபீக் அகமதுயூசுபி தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையை நிறைவேற்றிய பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். திண்டுக்கல் பெரிய பள்ளி, முகம்மதியார்புரம் பள்ளி, ரவுண்ட்ரோடு, யூசுப்பியா நகர், ஜின்னாநகர், பேகம்பூர், நாகல்நகர், சந்துக்கடை, மவுன்ஸ்புரம், குள்ளனம்பட்டி உள்ளிட்ட நகரில் 31 இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. நத்தம் கோவில்பட்டி ஈத்கா மைதானத்தில் 3 ஆயிரம் இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது. கொடைக்கானல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, ஆத்துார், சின்னாளபட்டி, வடமதுரை, வேடசந்துார், துவரங்குறிச்சி, ஒட்டன்சத்திரம், பழநி, சித்தரேவு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
பழநி : பாலசமுத்திரத்தில் கபர்ஸ்தான் வளாகம், பழநி, சண்முக நதி அருகே உள்ள ஈத்கா வளாகம், நெய்க்காரப்பட்டி பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றில் காலை 7:45 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்: துல்கர்னை சிக்கந்தர் நகர் ஜாமீஆ பள்ளிவாசல், வடக்கு பள்ளிவாசல், டவுன் பள்ளிவாசல், தர்கா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல், ரஹ்மானியா பள்ளிவாசல், சாலைப்புதுார், கொல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுபட்டி, இடையகோட்டை, விருப்பாச்சி பகுதி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
ஆத்துார் : ஆத்துார், சித்தையன்கோட்டை பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. சித்தையன்கோட்டை ஈதுகா மைதானத்தில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆத்தூர், சின்னாளபட்டி பள்ளிவாசல்களில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பலர் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் நண்பர்கள், சுற்றத்தாருடன் குர்பானி வழங்கி வாழ்த்து பரிமாறிக்கொண்டனர்.
நத்தம் : கோவில்பட்டி கோரிமேடு ஈத்கா மைதானத்தில் நத்தத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்று சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து உலக நன்மை, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து குர்பானி, பிற மதத்தை சேர்ந்த நண்பர்களுக்கு விருந்து கொடுத்தும் உபசரித்தனர். மேலமேட்டுபட்டி, வேம்பார்பட்டி, சாணார்பட்டி, வத்திபட்டி,பரளி, செந்துறை, கோசுகுறிச்சி, சமுத்திராபட்டி, சிறுகுடி, மணக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது.--
