ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள்... இல்லவே இல்லை: சாக்கடை இன்றி சுகாதார பிரச்னைகள்
ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள்... இல்லவே இல்லை: சாக்கடை இன்றி சுகாதார பிரச்னைகள்
ADDED : ஏப் 04, 2026 04:53 PM

நத்தம்:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சி கிராமங்களில் சாக்கடை, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.இதனால் மழை பெய்தாலே குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நோய் பரவும் அபாயத்துடனும் சுகாதார பிரச்னையுடனும் மக்கள் தவித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 306 ஊராட்சிகளுடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. நகராட்சி பகுதிகளையொட்டிய முதல் நிலை ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், கிராமங்களில் வசிக்கும் மக்களும் அடிப்படை வசதிகளுக்காக அல்லாடுகின்றனர். ஊராட்சிகளில் பரப்பளவு,மக்கள் தொகை, நிதி ஆதாரத்திலும் இலக்கை எட்டும் அளவிற்கு தகுதியான ஊராட்சிகள் உள்ளன. அதாவது 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை,ஆண்டுக்கு ரூ.30 முதல் 40 லட்சம் வரை வருவாய் வருகிறது. வருமானம் வரும் ஊராட்சிகளாக இருந்தாலும் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை.ஊராட்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட குறைந்த அளவில் மட்டுமே சுகாதாரபணியாளர்கள் உள்ளனர்.
குறைந்தளவு துப்புரவு தொழிலாளர்களால் தினமும் டன் கணக்கில் சேரும் குப்பையை அகற்ற
முடியவில்லை. இதனால் ஆங்காங்கே குப்பையை கொட்டி மாத கணக்கில் வைக்கின்றனர். சில இடங்களில் தீ வைத்து எரித்து அவர்களது வேலை பளுவை குறைக்கின்றனர்.இதனால் சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை உருவாகிறது. ஊராட்சியை பொதுமக்கள் அணுகினால் இருக்கிற தொழிலாளர்களை வைத்து ஊரை சீர்படுத்துகிறோம் வேறு என்ன செய்வது என ஊராட்சி செயலர்கள் ,அலுவலர்கள் கை விரிக்கின்றனர். கிராமங்களில் சேரும் குப்பையை அகற்ற டிராக்டர் வசதி கூட முறையாக இருப்பது இல்லை. இதனால் சுகாதார சீர்கேட்டில் பாதிக்கப்படுகின்றனர். குடிநீரும் போதுமான அளவு கிடைப்பது இல்லை. சில கிராமங்களில் வாரம் ஒருமுறை, பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் பெறும் நிலை உள்ளது.மேலும் பல கிராமங்களில் தற்போது வரை சாக்கடை, தெருக்களில் சாலை வசதி,மின்விளக்கு, குடிநீர் விநியோகம், குப்பை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாமல் உள்ளன.மழை பெய்தாலே சாக்கடை வசதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர்தேங்கி சுகாதார பிரச்னையை ஏற்படுத்துகிறது. கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
........
நோய் பரவும் அவலம்
பெரும்பாலான கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் பின் தங்கிய நிலையில் உள்ளனர். சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள வேம்பார்பட்டி ஊராட்சியில் நாகம்மாள் கோவில் தெரு பகுதியில் சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவு நீர் எப்போதும் தேங்கி கடுமையான சுகாதார பிரச்னையுடன் அப்பகுதி உள்ளது. மழை பெய்தாலே தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கழிவுநீராக மாறுகிறது. சுகாதாரப் பிரச்னை, கொசு உற்பத்தி ஏற்பட்டு நோய் பரவும் அபாயத்துடன் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மக்களின் நலன் கருதி அரசு, கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும்.
சி.ஆர். ஹரிஹரன், அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி பொருளாளர், வேம்பார்பட்டி.
....
