ADDED : ஆக 21, 2026 08:01 PM
வடமதுரை, ஆக.22-
வடமதுரை சார்பதிவாளர் அலுவலகம் முன் பத்திரப்பதிவு துறை உயரதிகாரியை கண்டித்து வைத்த பேனரை போலீசார் அகற்ற முயன்றதால் எழுத்தர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த அலுவலகத்தில் 14 ஆண்டுகளாக நிரந்தர சார்பதிவாளரை நியமிக்காமல் தினமும் ஒரு பொறுப்பு அலுவலராக அனுப்பி பணிகள் நடந்தன. இதனால் பணிகள் தேக்கம் அடைந்த நிலையில் நிரந்தர சார்பதிவாளர் கோரி பத்திர எழுத்தர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதன் பலனாக ஜூலை 1ல் இளங்கோ நிரந்தர சார்பதிவாளராக நியமிக்கப்பட்டார். அவரும் விடுப்பில் சென்று இரு வாரங்களாகிறது. மதுரை மண்டல உயரதிகாரியின் உத்தரவில் கட்டாய விடுப்பில் சென்றதாக கருத்து பரவியது.
இதனை கண்டித்து ‘வடமதுரை மக்களின் 13 வயது முயற்சி’ என குறிப்பிட்டு அலுவலகம் முன் பேனர் வைக்கப்பட்டது. இதனை போலீசார் அகற்ற முயன்றதால் பத்திர எழுத்தர்கள் ஒன்றுகூடி அலுவலகத்திற்குள் சென்றனர்.
தங்களது நிலுவை பத்திரங்கள் விடுவிப்பு எப்போது, அதுவரை புதிய பதிவுகள் வேண்டாம் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் பணிகள் பாதித்தது.
சங்க ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் ஆக.,24ல் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என தலைவர் அர்ஜூனன் கூறினார்.
