UPDATED : செப் 06, 2026 06:25 PM
ADDED : செப் 06, 2026 06:21 PM
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் தெரு பெரிய விநாயகர் கோயிலில் நத்தம் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், உழவாரப் பணிகள் நடந்தன. இக்கோயிலின் மூலவர் சன்னதி, பரிவார தெய்வங்களின் சன்னதிகளிலும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கழுவப்பட்டு கோயில் வளாகத்தில் கிடந்த குப்பை அகற்றபட்டன. பின்னர் கோயிலின் வெளி பிரகாரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றபட்டன. இப்பணியில் நத்தம் சிவனடியார்கள் திருக்கூட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
ஆன்லைன் மோசடி: எஸ்.பி., விழிப்புணர்வு நத்தம்: நத்தம் அருகே காசம்பட்டியில் ஆன்லைன் மோசடியில் பாதிக்கபட்ட கிராம மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், 'ஆன்லைன் மோசடி சம்பந்தமாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பணத்தை இழந்த மக்களுக்கு விரைவில் நல்ல தகவல் கிடைக்கும் என்றும், அதுவரை பாதிக்கபட்ட மக்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஏ.எஸ்.பி., மஞ்சிம்மா, இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் உள்ளிட்ட போலீசார், பொது மக்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் தின விழா: ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி பாராட்டினர். ஆசிரியர்கள், ஆசிரியர் தின உறுதி மொழியை ஏற்றனர். பள்ளி முதல்வர் சவும்யா வாழ்த்தி பேசினார். மாணவர்கள் பங்கேற்ற நடனம், பாடல், நாடகம் நடந்தது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வெளியேறும் வழி மாற்ற கோரிக்கை ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நுழைந்து வெளியே வரும் வழியை மாற்றி அமைத்தால் பயணிகள் சிரமமின்றி பஸ் ஏறி செல்வது தொடரும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டின் நடுப்பகுதியில் கடைகள் கட்டப்பட்டுள்ளன. மதுரை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், கோவை உடன் இணைக்கும் மையப் பகுதியாக உள்ளது. நத்தம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் ஒட்டன்சத்திரம் வரை பழநி செல்லும் பஸ்களில் வந்திறங்கி திருப்பூர், கோவை செல்லும் பஸ்களில் பயணிப்பதும் அதிகம். மேலும் ஒட்டன்சத்திரம் வழியாக பழநி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு 600 பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன. தற்போது இடது பகுதியில் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்து வலது பகுதியில் வெளியேறுகின்றன. பழநி, தாராபுரம் வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வலது பக்கச் சுற்றுச் சுவரை ஒட்டி நிறுத்தப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணிக்க பஸ் ஸ்டாண்ட் நடுப்பகுதியில் இருந்து செல்லும் பயணிகள் பஸ்களை சுற்றிக்கொண்டு சென்று பஸ் ஏற வேண்டும். இதனால் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இந்த முறையை மாற்றி அமைத்து வலது பகுதியில் பஸ்கள் நுழைந்து, இடது பகுதியில் வெளியே செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் பஸ் ஸ்டாண்ட் நடுப்பகுதியை பார்த்தபடி பஸ்களின் படிக்கட்டுகள் இருக்கும் என்பதால் பயணிகள் சிரமம் இன்றி பஸ் ஏறுவதற்கு வசதி ஏற்படும். இதனால் இதனை நகராட்சி, போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் பயணிகள் கோரியுள்ளனர்.
பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா
நத்தம்: -நத்தம் அருகே சமுத்திராபட்டியில் பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. நேற்று துவங்கிய விழாவில் பட்டத்தரசி அம்மன், பரிவார தெய்வங்கள் ஊர் மந்தையில் கண் திறக்கபட்டு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்தல், நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர் மாலையில் பரிவார தெய்வங்களோடு பட்டத்தரசி அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு நேரத்தில் பாதிக்கப்படும் கொடைரோடு பயணிகள் திண்டுக்கல், செப். 7 - மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் வரும் அரசு, தனியார் பஸ்கள் இரவு 7:30 முதல் இரவு 11:00 மணி வரை கொடைரோடு ஊருக்குள் வந்து செல்லாமல் பைபாஸ் ரோடு வழியாகவே சென்றுவிடுவதால் கொடைரோடு மக்கள் பாதிக்கப்படுவதால், திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை முதல் திண்டுக்கல் வரை வரும் வாகனங்கள் ஒன் டூ ஒன் பஸ்கள் தவிர அனைத்து பஸ்களும் வாடிப்பட்டி, கொடைரோடு ஊருக்குள் வந்து செல்ல போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் நிலையில் மதுரையில் புறப்படும் அரசு தனியார் பஸ்கள் இரவு 7:30 முதல் இரவு 11:30 மணி வரை பைபாஸ் ரோடு வழியை பயன்படுத்தி செல்கின்றன. மேலும் மதுரையில் கொடைரோடு, வாடிபட்டியில் நிற்காது எனக்கூறி பயணிகளை ஏற்றும் நிலை உள்ளது. இதனால் மதுரையில் இருந்து வாடிபட்டி, கொடைரோடு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலர், திண்டுக்கல் அரசு போக்குவரத்துத்துறை மண்டல பொது மேலாளர், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
விலை அதிகரித்த சின்ன வெங்காயம் ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து கிலோ ரூ.80 க்கு விற்பனை ஆனது.
ஒட்டன்சத்திரம், தங்கச்சியம்மாபட்டி, சாலைப்புதுார், கொல்லபட்டி, காவேரியம்மா பட்டி, பெரியகோட்டை, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகமாக சாகுபடி ஆகிறது. கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் அறுவடை மும்முரமாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு சின்ன வெங்காயம் வரத்து குறைந்து வருகிறது. இதனால் விலை ஏறுமுகமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக கிலோ ரூ.65க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது ரூ.80 க்கு விற்பனையாகிறது.
கமிஷன் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''மழை இன்றி சின்ன வெங்காயம் பயிரிடுவது பாதிக்கப்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.'', என்றார்.
