/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கணவரின் கொலைக்கு 'ஜாதி'யே காரணம்;- மனைவி கதறல்
/
கணவரின் கொலைக்கு 'ஜாதி'யே காரணம்;- மனைவி கதறல்
ADDED : அக் 14, 2025 04:41 AM
திண்டுக்கல்: ''நிலக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த பால் கறவை தொழிலாளி கொலைக்கு ' ஜாதி'தான் காரணம்''என தொழிலாளி மனைவி கூறினார்.
ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 24. பால் கறவை தொழில் செய்து வந்தார். பக்கத்து ஊரான கணபதிபட்டிக்கு பால் கறவைக்கு சென்றபோது சந்திரன் மகள் ஆர்த்தி உடன் காதல் உருவானது. கடும் எதிர்ப்புகளை மீறி ஜூனில் இருவரும் திருமணம் செய்தனர். ராமச்சந்திரன் மீது ஆர்த்தி குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்தனர். நேற்று முன்தினம் டூவீலரில் சென்ற ராமச்சந்திரனை வழிமறித்த சந்திரன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். நிலக்கோட்டை போலீசார் சந்திரனை கைது செய்தனர்.
ஆர்த்தி கூறுகையில், ''3 ஆண்டு காதலித்து வந்த நாங்கள் எனது வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தோம். அப்போதே கணவரையும், என்னையும் கொன்று விடுவதாக என் குடும்பத்தினர் மிரட்டினர். வீட்டிற்கு நேரில் வந்த எனது அப்பா தகராறு செய்ததோடு உங்கள் இருவரையும் சும்மா விட மாட்டேன் என ஆத்திரத்தோடு கூறினார். அப்போதே நான் உங்களுடன் வந்து விடுகிறேன். கணவரை எதுவும் செய்யாதீர்கள் என கெஞ்சினேன் . இந்நிலையில் எனது கணவரை கொலை செய்துவிட்டார். என்னையும் கொலை செய்துவிடுவதாக என் அண்ணனும், அம்மாவும் மிரட்டி உள்ளனர் என்றார்.
ராமச்சந்திரன் கொலையை ஆணவ கொலையாக பதிவுசெய்யக்கோரி அவரின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவு முன்பு தர்ணா செய்தனர். டி.எஸ்.பி., கார்த்திக், இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி சமாதானம் செய்தனர். இது போல் ராமநாயக்கன்பட்டியிலும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். வத்தலக் குண்டு இன்ஸ்பெக்டர் கவுதமன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்க கலைந்து சென்றனர்.