ADDED : மார் 23, 2026 06:35 AM
கன்னிவாடி: கன்னிவாடி பகுதியில் சுண்டல் சாகுபடி பால் பிடிக்கும் பருவத்தில் மும்முரம் அடைந்துள்ளது.
கன்னிவாடி பகுதியில் கார்த்திகை பட்ட சாகுபடியாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சுண்டல் சாகுபடி நடப்பது வழக்கம். மழை, வெயில், பனிப்பொழிவு போன்றவை கைகொடுக்காத நிலையில் சில ஆண்டுகளாக கொத்தமல்லி, சுண்டல், பயறு வகை சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது.
தற்போது தருமத்துப்பட்டி, காரமடை, கரிசல்பட்டி, வண்ணம்பட்டி, சின்னப்பபுரம், கசவனம்பட்டி பகுதியில் சுண்டல் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் பிடிக்கும் பருவத்தில் மகசூல் அளிக்க தயாரான நிலையில் முதல்கட்ட அறுவடை பணிகள் விரைவில் துவங்க உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், ''மண் வளம் இழப்பு, அதற்கேற்ப சுண்டல் செடிகளின் வளர்ச்சி நிலை மாறுபடுகிறது. இந்த தன்மைக்கு ஏற்ப அறுவடை பணிகள் ஓரிரு வாரங்களில் துவங்கும்.
இந்தாண்டு மழை, பனி, வெயில் போன்ற பருவகால மாற்றங்கள் கைகொடுக்கவில்லை. இருப்பினும் பயறு வகைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ள சூழலில் ஓரளவு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது'' என்றனர்.
