/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பங்குத்தொகையை அதிகரித்து தர வேண்டும் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை
/
பங்குத்தொகையை அதிகரித்து தர வேண்டும் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை
பங்குத்தொகையை அதிகரித்து தர வேண்டும் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை
பங்குத்தொகையை அதிகரித்து தர வேண்டும் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை
ADDED : அக் 17, 2025 01:51 AM
மதுரை: திரையரங்குகளுக்கு விநியோகஸ்தர்கள் வழங்கும் லாப பங்கை அதிகரிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை ராமநாதபுரம் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு மதுரை திரையரங்கு உரிமையாளர் சங்கம் அனுப்பியுள்ள கடிதம்:
ஓ.டி.டி., ஸ்மார்ட் 'டிவி' போன்றவற்றால் தியேட்டருக்கு மக்கள் வருவது குறைந்து கொண்டே வருகிறது. மேலும் மின் கட்டணம், இரண்டு மடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி, ஊழியர்கள் சம்பளம், நிர்வாக செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் வாழ்வாதாரமே இழக்கும் அளவிற்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதிலிருந்து சிறிதேனும் மீள பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்.
வசூலில் தியேட்டர்களுக்கு கூடுதலாக லாப பங்கு தர வேண்டும். ரஜினி, கமல், விஜய், அஜித், படங்களுக்கு 30 சதவீதம், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களுக்கு 35 சதவீதம், மற்ற நடிகர்கள் மற்றும் பான் இந்தியா படங்களுக்கு 40, ஆங்கிலம் மற்றும் பிற மொழி படங்களுக்கு 50 சதவீதம் தர வேண்டும். 2வது வாரத்தில் இருந்து 5 சதவீதம் குறைத்துக்கொள்ளலாம்.
விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்களுக்கான லாப சதவீதம் குறித்து 1992ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் மற்றும் அதன் அடிப்படையில் 14.1.1993ல் வெளியிடப்பட்ட அரசாணையை கடைபிடிக்க வேண்டும்.
தியேட்டர் உரிமையாளர்களுக்குத்தான் அந்தந்த பகுதியில் என்ன கட்டணம் வைத்தால் மக்கள் வருவார்கள் என தெரியும். அதற்கேற்ப குறைந்த பட்ச டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி தர வேண்டும். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்த கட்டண டிக்கெட் கொடுப்பது போல் பிற தியேட்டர்களுக்கும் அனுமதி தர வேண்டும்.
5 காட்சிகள் திரையிடும் நாட்களில் முதல் காட்சி காலை 9:00 மணிக்கு துவங்க வேண்டும். அதில் விநியோகஸ்தரின் தலையீடு இருக்க கூடாது. மேலும் ஆன்லைன் புக்கிங் துவங்கும் நேரத்தையும் நாங்களே முடிவு செய்ய வேண்டும்.
ஒன்றிற்கு மேற்பட்ட சினிமாக்கள் வெளியாகும் நாட்களில் விரும்பிய தியேட்டரில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்களுக்கு உரிமை தர வேண்டும். நஷ்டத்தை தவிர்க்க, குறிப்பிட்ட அளவு பார்வையாளர்கள் வந்தால் மட்டுமே படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். காட்சிகளை குறைத்ததற்காக அடுத்த படத்தை அந்த விநியோகஸ்தர் தரும் போது தியேட்டர் உரிமையாளர்களுக்கான லாப பங்கை குறைப்பது, அபராதம் விதிப்பது போன்றவற்றை நிறுத்த வேண்டும்.
லாப பங்கு சதவீதம் குறித்து முடிவு செய்ய எங்கள் சங்கம் மூலம் தனி கமிட்டி உருவாக்கியுள்ளோம். நவம்பர் முதல் அவர்கள் மூலமாக பங்கு சதவீதம் முடிவு செய்யப்படும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.