சமூக அக்கறையுள்ள மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர் பொறுப்பு பயிற்சி முகாமில் சி.இ.ஓ., பேச்சு
சமூக அக்கறையுள்ள மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர் பொறுப்பு பயிற்சி முகாமில் சி.இ.ஓ., பேச்சு
ADDED : செப் 04, 2026 04:35 AM

திண்டுக்கல்: ''சமூக அக்கறையுள்ள மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் பொறுப்பு'' என புத்தாக்க பயிற்சி முகாமில் சி.இ.ஓ., செல்வக்குமார் பேசினார்.
திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் என்.எஸ்.எஸ்., திட்ட ஆசிரியர்கள் 60 பேர் பங்கேற்ற புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. திட்ட அலுவலர் விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார். திட்ட அலுவலர் விமலாதேவி வரவேற்றார். மாநில உதவி திட்ட அலுவலர் சௌந்தர்ராஜ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்பாபு பேசினர்.
முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார் பேசுகையில், 'இன்றைய சூழலில் அலைபேசி, சமூக ஊடகங்களால் மாணவர்களுக்கு பெரிய சவால்கள் உள்ளன. சமூக அக்கறை இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இதையெல்லாம் திருத்தி சமூக அக்கறையுடன் நல்ல குடிமகனாக உருவாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு. அதற்கேற்ப என்.எஸ்.எஸ்., ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்' என்றார்.
