/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயிர்களுக்கு தேவை குறைந்தபட்ச ஆதாரவிலை! விவசாயம் பாதிக்காத வகையில் 100 நாள் வேலை எதிர்பார்ப்பு
/
பயிர்களுக்கு தேவை குறைந்தபட்ச ஆதாரவிலை! விவசாயம் பாதிக்காத வகையில் 100 நாள் வேலை எதிர்பார்ப்பு
பயிர்களுக்கு தேவை குறைந்தபட்ச ஆதாரவிலை! விவசாயம் பாதிக்காத வகையில் 100 நாள் வேலை எதிர்பார்ப்பு
பயிர்களுக்கு தேவை குறைந்தபட்ச ஆதாரவிலை! விவசாயம் பாதிக்காத வகையில் 100 நாள் வேலை எதிர்பார்ப்பு
ADDED : பிப் 06, 2024 07:20 AM

ஒட்டன்சத்திரம் : தமிழ்நாடு அரசின் விவசாய பட்ஜெட்டில் பயிர்கள் அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வேளாண் பணிகள் பாதிக்காத வகையில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் , யூரியாவிற்கு கொடுக்கப்படும் மானியத்தை விலை ஏற்றத்திற்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும் என்ற அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
விவசாயிகளுக்கென தனியாக விவசாய பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.இதில் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு விவசாய பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாய விலை பொருட்களுக்கு எந்த காலத்திலும் நிரந்தர விலை கிடைப்பதில்லை. இதனால் விளைச்சல் அதிகமாக உள்ள காலங்களில் விலை மிகவும் குறைந்து விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. விளை பொருட்களுக்கு நல்ல விலை இருக்கும் நாட்களில் போதிய விளைச்சல் இல்லாமல் போகிறது. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கப்படும் விளை பொருட்கள் நுகர்வோர்களான மக்களிடம் சென்று சேரும் போது பல மடங்கு அதிகரித்து விற்கப்படுகிறது. மேலும் 100 நாள் வேலை திட்டம் காரணமாக விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் 100 நாள் வேலைத்திட்டத்தை வேளாண் பணிகள் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இதோடு விவசாயிகள் எந்த காலத்திலும் பாதிக்காமல் இருக்கும் வகையில் அனைத்து விவசாய விலை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
...................
விலைக்கேற்ப தேவை மானியம்
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காய்கறிகள், பயறு , தானிய வகைகளை விவசாயிகள் அதிகமாக பயிரிடுகின்றனர். கூலித் தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். குறிப்பாக நடவு,அறுவடை நேரத்தில் தொழிலாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலை , நுாற்பாலைகளுக்கு சென்று விட்டனர். அதிக கூலி கொடுத்து பக்கத்து மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். நடவு ,அறுவடை போது 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பர். விவசாய தொழிலாளர்கள் தட்டுப்பாட்டை போக்க கேரள மாநிலத்தில் உள்ளது போல் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும். உரம் மானியத்தை விலை ஏற்றத்திற்கு ஏற்ப அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்காக விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கருத்தைக் கேட்டு விவசாய பட்ஜெட்டை அமைக்க வேண்டும்.
- கந்தசாமி , தமிழ்நாடு விவசாயிகள் சங்க உறுப்பினர், அப்பியம்பட்டி.
............