/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான துணை சுகாதார நிலைய கட்டடம்
/
சேதமான துணை சுகாதார நிலைய கட்டடம்
ADDED : ஏப் 24, 2025 06:29 AM

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சேதமடைந்த துணை சுகாதார நிலைய கட்டடங்களை சீரமைப்பதில் அலட்சியத்தால் விபத்து அபாய சூழலில் சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
சின்னாளபட்டி அரசு சமுதாய நல மையத்தின் கட்டுப்பாட்டில் மேட்டுப்பட்டி, அண்ணா நகர் அருகே உழவர் சந்தை பகுதியில் துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு கர்ப்பிணிகளுக்கான வாராந்திர, மாதாந்திர பரிசோதனை, ஆலோசனைகள், முதலுதவி சிகிச்சை, குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பேரூராட்சிக்கு உட்பட்ட சிக்கனம்பட்டியில் செயல்பட வேண்டிய இந்த துணை சுகாதார நிலையம் போக்குவரத்து வசதிக்காக 1983 முதல் உழவர் சந்தை அருகே செயல்பட்டு வருகிறது. 42 ஆண்டுகளான சூழலில் இந்த கட்டடம் சரிவர பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. கூரைகள் பெயர்ந்து விழும் சூழலில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வரும் நேரத்தில் அவ்வப்போது சிறு சிறு துகள்களாக கூரை பெயர்ந்து விழுவதால் அச்சமான சூழ்நிலையில் உள்ளது.
இப்பிரச்னை தொடர்பாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்த போதும் நடவடிக்கையில் தொய்வு நிலவுவதாக இப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.சேதமடைந்த துணை சுகாதார நிலையங்களை சீரமைத்து பாதுகாப்பான சிகிச்சை. ஆலோசனைகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.
பயனாளிகள் அச்சம்
ஜீவானந்தம்,அண்ணா நகர் : துணை சுகாதார நிலைய கூரை பெயர்ந்து விழுவதால் மருத்துவமனை உள்ளே அமர்ந்திருக்கும் கர்ப்பிணிகள் ஒரு வித உயிர் பயத்துடன் உள்ளனர். இக்கட்டடம் திறக்கப்பட்டு 42 ஆண்டுகளாகியும் பராமரிப்பின்றி கிடக்கிறது. வெறுமனே அவ்வப்போது பெயரளவில் வர்ண பூச்சு பணிகள் மட்டுமே நடந்துள்ளது. சுகாதார பிரச்னை சார்ந்த தேவைகளுக்காக வரும் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலில் மருத்துவ சேவை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
--பராமரிப்பது இல்லை
குருசாமி, முன்னாள் ராணுவ வீரர், சின்னாளபட்டி : ஏராளமான புற நோயாளிகள் வந்தபோதும், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வெளி நோயாளிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பராமரிக்கப்படுவது இல்லை.
நோயாளிகள் ரத்த அழுத்தம், சர்க்கரை, கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை போன்றவற்றிற்காக பலர் இங்கு வருகின்றனர். சேதமடைந்த பழைய கட்டடத்தில், காத்திருக்கும் அபாய நிலை தொடர்கிறது. புகார்கள் தொடர்ந்தாலும் கண்காணிப்பு அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். நெசவாளர்கள், ஏழை, கூலித்தொழிலாளிகள் சிகிச்சை பெற ஏதுவாக பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்.

