UPDATED : செப் 29, 2026 03:47 PM
ADDED : செப் 29, 2026 03:21 PM
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்ட வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் சோளம் விதைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் நலன் கருதி ஒன்றியம் வாரியாக உள்ள வேளாண் அலுவலகங்களில் சாகுபடிக்கான நிலக்கடலை விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஆடிப்பட்ட விதைப்பு எதுவும் இல்லாத நிலையில் நிலக்கடலை விதையை பெரும்பாலான விவசாயிகள் வாங்கவில்லை. புரட்டாசி, ஐப்பசியை தொடர்ந்து மழைக்காலம் என்பதால் கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிராக சோளத்தை பயிரிட உள்ளனர். எனவே ஒன்றியம் வாரியாக வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் சோளம் விதைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜரத்தினம் கூறுகையில், ''ஆடிப்பட்டம் மழையே இல்லாமல் போனது. தற்போது நிலக்கடலை சாகுபடிக்கான பருவ காலமும் இல்லை. ஆனால் வேளாண் அலுவலகங்களில் நிலக்கடலை விதைகளை மட்டுமே வைத்துள்ளனர். இனி வரும் பருவ மழையை நம்பி கால்நடைகளுக்கான சோளப்பயிர்களை விவசாயிகள் பயிரிட உள்ளனர். தற்போது கிலோ சோளம் விதை ரூ.80க்கு விற்கிறது. அதுவும் தேடிப்பிடித்து வாங்க வேண்டி உள்ளது. எனவே சோளம் விதைகளை மானிய விலையில் வழங்கினால் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்'' என்றார்.
