UPDATED : ஜூன் 27, 2026 04:46 PM
ADDED : ஜூன் 26, 2026 09:42 PM

பழநி: அரசு விடுமுறை நாளான நேற்று பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். கோயிலுக்கு செல்ல ரோப்கார், வின்ச் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். காலையில் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கூட்ட நெரிசல் அதிகமானது. உடனே கோயில் நிர்வாகம் குடமுழுக்கு மண்டபம் வழியாக அனுமதித்தது. பொது, கட்டண தரிசன வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வெளிபிரகாரத்தில் மருத்துவ வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. கட்டண தரிசன வழியில் காத்திருந்த பெண்கள் சிலர் வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைந்து மயங்கினர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
தரிசன வரிசை பகுதியில் நிழற்பந்தல்களை அதிகரிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இன்றும் நாளையும் தொடர் விடுமுறையாக அமைவதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
