ADDED : பிப் 04, 2026 06:20 AM

பழநி: பழநியில் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்களால் பழநி வந்த பக்தர்கள் அவதியுற்ற நிலையில் இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பழநி வரும் வெளியூர் பக்தர்கள் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கோயிலுக்கு செல்ல ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். ஆட்டோ கட்டணங்கள் முறைப்படுத்தப்படாததால் அதிக கட்டணம் வசூலால் பக்தர்களுக்கும், ஆட்டோ ஓட்டும் நபர்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பழநி தைப்பூசத்திற்கு வந்த பக்தர்கள் கிரி வீதி, அய்யம்பிள்ளை ரோடு, பூங்கா ரோடு, கொடைக்கானல் ரோடு, அருள்ஜோதி வீதி, ரயில்வே ஸ்டேஷன் , பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு ஆட்டோ மூலம் செல்கின்றனர். இதற்கு அதிக அளவில் கட்டணம் கேட்பதால் பக்தர்களுடன் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரம் பேச வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதனால் பக்தர்கள் ஆட்டோக்களை தவிர்த்து செல்ல முடியாமல் மனஉளைச்சல் உடன் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். கட்டணத்தை முறைப்படுத்த போக்குவரத்து துறை ,போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணத்தை இழந்த பக்தர்கள் ஸ்ரீதர், பா.ஜ., திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், பழநி : தைப்பூச தினத்தன்று ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கூட்ட நெரிசலில் வேகமாக ஓட்டினர். இதனால் பாதயாத்திரை பக்தர்கள் அச்சமடைந்தனர். மேலும் ஒரு நபரிடம் ரூ.100 வீதம் 10 நபர்களை ஆட்டோகளில் ஏற்றினர். பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து அடிவாரம் செல்ல ரூ.100 ஒரு நபருக்கு பெற்றதால் பக்தர்கள் கவலை அடைந்தனர். மேலும் கூட்ட நெரிசல் வாகனங்களை அனுமதிக்க தடை உள்ளிட்ட காரணங்களை கூறி வேறு இடங்களுக்கு செல்லும் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தனர். முறையான கட்டணம் நிர்ணயிக்கப்படாததால் பக்தர்கள் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பணத்தை இழந்தனர்.
சீருடை அணிவதில்லை முருகானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர், த.ம.மூ.க.,பழநி : பழநியில் சில ஆட்டோ ஓட்டுநர்கள் முறையான சீருடை, பேட்ச் ஆகியவை அணிவதில்லை. தாறுமாறாக ஆட்டோக்களை இயக்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பழநிக்கு பக்தர்கள் அதிக அளவில் வரும் இந்நேரத்தில் சில ஆட்டோ ஓட்டுநர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் வெளியூர் பக்தர்களிடம் மதிப்பு குறைகிறது. இவ்வாறு நடந்து கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்களை சக ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்வு பழநி பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட்கள் உள்ளன. குறிப்பிட்ட ஆட்டோக்கள் மட்டும் குறிப்பிட்ட ஸ்டாண்ட்களில் இயங்கி வருகிறது. பக்தர்கள் அதிக அளவில் வரும் இடங்களில் ஆட்டோக்களுக்கு முனையங்கள் அமைக்க வேண்டும். குறிப்பாக பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சுற்றுலா பஸ் நிலையங்கள், கொடைக்கானல் ரோடு, பூங்கா ரோடு, அய்யம்புள்ளி ரோடு ஆகியவற்றில் ஆட்டோ களுக்கு முனையங்கள் அமைக்க வேண்டும்.
முக்கிய இடங்களுக்கு செல்ல கட்டணங்களை ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்காத வகையிலும், பக்தர்கள் வேதனைய அடையாத வகையிலும் சரியான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டண விவரங்களை காட்சிப்படுத்த வேண்டும். இதனால் பழநி வரும் பக்தர்கள் ஆட்டோ பயணம் செய்யும்போது மன உளைச்சல் ஏற்படாமல் தகுந்த தொகையை தரத் தயார் ஆவார்கள்.
பழநியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆட்டோக்களும் இயக்க வழி வகுக்க வேண்டும். சீருடை பேட்ச் வண்டி ஆவணங்கள் இல்லாத ஓட்டுநர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் , போக்குவரத்து துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
