/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேவாங்கு பாதுகாப்பு மையம் திறப்பு
/
தேவாங்கு பாதுகாப்பு மையம் திறப்பு
ADDED : மார் 08, 2026 06:00 AM

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் பூனை கரட்டு பகுதியில் தேவாங்கு பாதுகாப்பு மையம் நேற்று திறக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார், கரூர் மாவட்டம் கடவூர் மலைத்தொடர்களில் 11,806 எக்டேர் பரப்பில் தேவாங்குகள் அதிகளவில் வாழ்கின்றன. இவை அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை பாதுகாப்பு சர்வதேச அமைப்பு குறிப்பிட்டது.
தேவாங்குகள் அழியாமல் பாதுகாக்க சரணாலயம் அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தினர். தினமலர் நாளிதழும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வலியுறுத்தியது. இதன் பலனாக இந்தியாவின் முதல் தேவாங்கு வன உயிரின சரணாலயத்தை இப்பகுதியில் அரசு அமைத்தது.
இதன் தொடர்ச்சியாக அய்யலுார் பூனை கரட்டில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சுற்றுச்சூழல், சுற்றுலா, தேவாங்குகள் தொடர்பான குறும்படங்கள் திரையிடுவதற்கான அரங்கு, உணவகம் என பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டிய நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர் வராததால் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ இம்மையத்தை திறந்து வைத்தார்.
முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர்கள் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ராகேஷ்குமார் டோக்ரா, திண்டுக்கல் மண்டல வன பாதுகாவலர் முகமது ஷபாப், கலெக்டர் சரவணன், மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா பங்கேற்றனர். அய்யலுார் வண்டிகருப்பண சுவாமி கோயில் எதிரே உள்ள ரோட்டில் பயணித்தால் இம்மையத்தை எளிதாக சென்றடையலாம்.

