திண்டுக்கல் பா.ஜ., கவுன்சிலர் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை
திண்டுக்கல் பா.ஜ., கவுன்சிலர் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை
ADDED : ஜன 30, 2026 06:30 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் பா.ஜ., கவுன்சிலர் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் நவ.26ல் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய 14வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் தனபாலன், பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள் குறித்து ஆட்சேபனைகள் தெரிவித்து கேள்வி கேட்டார்.
இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் ஆளுங்கட்சி அமைச்சரை விமர்சித்ததாகவும், ஒழுங்கீனமாக செயல்படுதல், கூட்டத்தின் அமைதியை குலைத்தல், தலைமைக்கு கீழ்படியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவரை மேயர் இளமதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து கவுன்சிலர் தனபாலன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமச்சந்திரன் அமர்வு விசாரித்தனர். இந்த வழக்கில் மேயரின் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை விதித்து நீதிபதிகள் அமர்வு நேற்று உத்தரவிட்டனர். இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சியில் இன்று (ஜன.30) நடக்கும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கவுன்சிலர் தனபாலன் கலந்துகொள்கிறார்.
