/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவுகளால் கலக்கம்; ஆக்கிரமிப்பால் அவதி பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 44வது வார்டு மக்கள்
/
கழிவுகளால் கலக்கம்; ஆக்கிரமிப்பால் அவதி பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 44வது வார்டு மக்கள்
கழிவுகளால் கலக்கம்; ஆக்கிரமிப்பால் அவதி பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 44வது வார்டு மக்கள்
கழிவுகளால் கலக்கம்; ஆக்கிரமிப்பால் அவதி பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 44வது வார்டு மக்கள்
ADDED : நவ 09, 2025 05:49 AM

திண்டுக்கல்: கழிவுகளால் நோய் தொற்று ,ஆக்கிரமிப்பால் தினம் தினம் அவதி என பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் மாநகராட்சி 44வது வார்டு மக்கள் தத்தளிக்கின்றனர்.
சுபாஷ் சந்திரபோஸ் தெரு, சவேரியார் பாளையம், பொன்னம்மாள் நகர், பழைய ரேஷன்கடை சந்து, பாவேந்தர் நகர், முருகன் கோயில் சந்து உட்பட முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் கட்டட கூலி, மர அறுவை மில், வெல்டிங் பட்டறைகள் என தினசரி கூலி வேலை செய்து வருமானம் ஈட்டும் மக்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
இங்கு சுகாதார பிரச்னைகள் தலைவிரித்தாடுகிறது. சாலை ஓரங்கள், போக்குவரத்து பகுதியில் குவியல் குவியலாக கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியால் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.
சாலை வசதி இல்லாமல் மக்கள் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது. குடிநீர் சப்ளை முறையாக இல்லாததால் தண்ணீருக்காக அலையும் நிலையும் உள்ளது. ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடியும் தொடர்கிறது.
ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லை . மாநகராட்சி என சொல்லப்பட்டாலும் வாழ்க்கைக்கு தேவையான வசதியில் கிராமங்களை விடவும் பின்தங்கியே உள்ளது என்கின்றனர் வார்டு மக்கள்.
ரோட்டில் குவியும் குப்பை அய்யப்பன், மேட்டுப்பட்டி: வார்டில் சுத்தம் என்பதே இல்லை. ரோட்டில் சகட்டுமேனிக்கு குப்பை கொட்டப்படுகிறது. அய்யப்பன் கோயிலை யொட்டிய பகுதியில் வழிநெடுக கொட்டப்பட்டிருக்கும் குப்பை வாரக்கணக்கில் அப்படியே கிடக்கிறது.
அப்பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் இருந்து மட்டுமின்றி வணிகக்கடை கழிவுகள், இறைச்சிக்கழிவுகள், இரும்பு கழிவுகள், சலுான் கடை கழிவுகள் என அத்தனையும் ரோட்டில் கொட்டப்படுகிறது.
மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புது மின்கம்பங்களை நட வேண்டும். பொதுப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம் தடவுவது போல் வார்டில் பணிகள் நடக்கிறது .
ரேஷன் பெறுவதில் சிரமம் இன்பராஜ், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர், கிழக்கு பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு: வார்டுக்குள் 2 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. சொந்தக்கட்டடம் இல்லாததால் பொருட்கள் வாங்குவதில் சிரமங்களை சந்திக்கிறார்கள். பல இடங்களில் சாலை செப்பனிடவில்லை.
15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பாதாள சாக்கடை பணிகள் துவங்கவில்லை. மேட்டுப்பட்டி பகுதி என்றால் அடிதடி, சச்சரவு என தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.
இங்குள்ள இளைஞர், இளம்பெண்களுக்காக கல்வி முன்னேற்றத்துக்காக நுாலகம், போட்டித்தேர்வுகளுக்கு தயராகும்படியான பொது படிப்பகம் அமைத்து தரலாம். இடநெருக்கடி காரணமாக இன்னமும் பல வீடுகளுக்கு கழிப்பறை இல்லாத நிலை உள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மார்த்தாண்டன், கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டில் அனைத்து தெருக்களுக்கும் சாக்கடை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிகள் துவங்க வேண்டியிருப்பதால் சில இடங்களில் மட்டும் சாலை போடவில்லை.
பாதாள சாக்கடை பணிகளுக்கு பிறகு அதுவும் நிறைவேற்றி தரப்படும். ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி வருகிறேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியாருக்கு சொந்தமான இடம் என்பதால் அவர்களிடம் அனுமதி வாங்கி அந்த இடத்தில் குப்பைக் கொட்டப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.
இருப்பினும் இந்த பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் நடவடிக்கையும் பரிசீலனையில் உள்ளது. பாவேந்தர் நகரில் சமுதாய நலக்கூடம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

