தி.மு.க., நிறுத்திய திட்டங்கள் மீண்டும் அமல் ; நத்தம் விஸ்வநாதன் பிரசாரம்
தி.மு.க., நிறுத்திய திட்டங்கள் மீண்டும் அமல் ; நத்தம் விஸ்வநாதன் பிரசாரம்
ADDED : ஏப் 16, 2026 09:58 PM

திண்டுக்கல்:''-தி.மு.க.,வை வீழ்த்தி அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் விரிவுபடுத்தப்பட்டு பழனிசாமி தலைமையில் மீண்டும் அமல்படுத்தப்படும்'' என அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதியளித்தார்.
வேம்பார்பட்டியில் தமிழர் தேசம் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து நல்லாம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, அந்தோணியார்நகர், வேடப்பட்டி, மருத மொட்டணம்பட்டி, தண்டல்காரன்பட்டி, கண்ணார்பட்டி, வாழைக்காய்பட்டி உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட பகுதிகளுக்கு திறந்த வேனில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்த நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:
நான் அமைச்சராக இருந்த போது பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். 5 ஆண்டுகளில் எம்.எல்.ஏ.,வாக இருந்து மக்களுக்கு சேவையாற்றி இருக்கிறேன். தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் நத்தம் தொகுதி மக்களுக்கான பிரச்னைகள் குறித்து சட்டசபையில் பேச நான் தவறியதில்லை. தி.மு.க. ,ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மின்கட்டணம் இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த கொடுமைகளுக்கு விடிவு கிடைக்க அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும். தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட அ.தி.மு.க.,வின் திட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும் .என்னை எதிர்க்கும் வேட்பாளர் இந்த மாவட்டம் கூட கிடையாது. இதை மனதில் வைத்து ஓட்டளிங்கள் என்றார்.
